அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்-பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள்

205 0

தற்போது மேல்மாடியில் இயங்கி வரும் பருத்தித்துறை மரக்கறிச்சந்தையைப் பொருத்தமான இடத்திற்கு மாற்றித்தரக் கோரி பருத்தித்துறைச் சந்தை வியாபாரிகள் நேற்றைய தினம் தமது வியாபார நடவடிக்கைகளைக் நிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் “அரசியல்வாதிகளே எம்மை ஏமாற்றாதீர்”, “நகரசபையே தேர்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்று”, “நகரசபையே வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்று”, “மரக்கறிச் சந்தையை கீழ்த்தளத்திற்கு மாற்று”, “வியாபாரிகளின் பிழைப்பில் மண் போடாதே” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கிக் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகரசபையின் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் தற்போது மரக்கறிச்சந்தை இயங்கி வருகின்றது. இம் மரக்கறிச்சந்தை மேற்தளத்தில் இயங்குவதால் பொதுமக்கள் இலகுவாக வந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் பாரிய சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதனால், எமது வியாபாரநடவடிக்கைகள் மிகவும் குறைவடைந்து விட்டன. எமது பொருட்களை மேற்தளத்திற்கு கொண்டுசெல்வதில் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர் கொள்கிறோம்.

இவ்விடயங்கள் சம்பந்தமாக கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் மரக்கறிச்சந்தையை மேற்தளத்தில் இருந்து மாற்றுவதாக உறுதி அளித்தன.

ஆனால், நகரசபையில் ஆட்சியை அமைத்த பின் எமது கோரிக்கைகளை பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி உதாசீனம் செய்வதோடு எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரவும் எவ்வித முயற்சியும் எடுப்பதாகவும் தெரியவில்லை

.எனவே, எமது மரக்கறிச்சந்தையை பொருத்தமான இடத்திற்கு மாற்றித்தரக் கோரி  எமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்திப் பகிஸ்கரிக்கிறோம்.எமது கோரிக்கை நிறைவேற்றப்படாது விடின்,எதிர்காலத்திலும் எமது போராட்டம் தொடரும் என்பதை அதிகாரிகளிற்கும்,அரசியல் கட்சிகளிற்கும் அறியத் தருகின்றோம் என்றனர்.

Leave a comment