இன்று முழு அடைப்பு போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் – ஆட்டோ, வேன்கள் ஓடாது என்று அறிவிப்பு

219 0

எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. சென்னையில் அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், ஆட்டோ, வேன்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வணிகர் சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் சுமார் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று தெரிகிறது.

தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படாது.

லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் சுமார் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. பணிக்கு வரும் தொழிலாளர்களை பொறுத்து அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

சென்னையில் அரசு பஸ்களை தடையின்றி இயங்கும் வகையில் 38 டெப்போக்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் இந்த முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற்றுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் மருந்தகம், பால் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்குகள் வழங்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரிகள் சார்பில் காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிற்சங்கத்தினரும் பங்கேற்கின்றனர்.

மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்கின்றன.

பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நேரத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் மாணவர்கள், பெற்றோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படாமல் இருந்தால் பள்ளிகளுக்கு குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பாக அனுப்பி வைப்பது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை அழைத்துவர தனியார் வாகனங்களை தான் ஏற்பாடு செய்துள்ளன. எனவே தனியார் வாகனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், பள்ளிக்கு மாணவர்களை அழைத்துவர முடியாத நிலை ஏற்படும்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘தேர்வு காலம் இல்லாமல் மற்ற நாட்களில் முழு அடைப்பு போராட்டம் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் விடுமுறை எடுக்க சொல்லி விடுவோம். ஆனால் காலாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி எங்களை அரசியல் கட்சிகள் தவிக்கவிட்டு இருக்கிறது’ என்றனர்.

Leave a comment