தி.மு.க., – மா.செ.,க்கள் கூட்டத்தில் அழகிரி விவகாரம் பற்றி பேச மறுப்பு!

220 0

தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், அழகிரி குறித்து, எதுவும் பேசப்படவில்லை. இடைத்தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், நேற்று முதல் முறையாக, சென்னை, அறிவாலயத்தில், மாவட்ட செயலர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் பேசினர். அதைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் நடக்க உள்ள, திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ள, மாவட்ட செயலர்கள், தேர்தல் நிலவரம் குறித்து பேசினர்.

அதன்பின், துணை பொதுச் செயலர்கள், பொருளாளர் பேசினர். இறுதியாக, ஸ்டாலின் உரையாற்றினார்.தி.மு.க., தலைவராக கருணாநிதி இருந்தபோது, அவரது மகன் அழகிரி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, மீண்டும் கட்சியில் சேர்க்கும்படி வலியுறுத்தி வருகிறார். தன் செல்வாக்கை காட்ட, சென்னையில், அமைதி பேரணியும் நடத்தினார்.

இது குறித்து, நேற்று நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், விவாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அழகிரி குறித்து யாரும் பேசவில்லை.

ஸ்டாலின் பேசியதாவது:

அனைவரும் லோக்சபா தேர்தலுக்கு தயாராக வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதிகளில், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; மக்களை சந்திக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற தேவையான நடவடிக்கைகளை, தற்போதே மேற்கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடி முகவர்களாக, நம்பிக்கையானவர்களை நியமிக்க வேண்டும். சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 20 பேர் நியமித்தோம். இறுதியில், பாதி பேர் மட்டுமே இருந்தனர். அதுபோன்ற நிலை ஏற்படக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:ஸ்டாலின், தன்னை சந்திக்க வருவோர், மலர் கொத்துகளுக்கு பதிலாக, புத்தகங்கள் கொடுக்கும்படி கூறியிருந்தார். அதன்படி, ஏராளமான புத்தகங்கள் குவிந்து, அவை நுாலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இனிமேல், புத்தகங்களுக்கு பதிலாக, பணம் கொடுங்கள். கட்சிக்கு நிதி தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment