கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதம் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிப்பதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஆயுதங்கள் இருப்பதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விரைவாக, விரிவான விசாரணையொன்றை நடாத்துமாறும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா ஜனாதிபதி, பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களின் விடுதலைக் கட்சியினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அக்கட்சின் தலைவரும் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. தலைவர்களுள் ஒருவருமான இன்பராசா கந்தசாமி என்பவரினால் இக்குற்றச்சாட்டு வெளியிடப்பட்டது.
எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களிடம் இருந்த 5 ஆயிரம் ஆயுதங்கள் தன்னிடமும், அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனிடமும் இருப்பதாக அவர் பொய்யான குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.
அந்த ஆயுதங்கள் தற்பொழுது கிண்ணியா, காத்தாண்குடி மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம் இளைஞர்களிடம் இருப்பதாகவும் இன்பராசா கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படையும் அற்றது எனவும் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

