சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தினால் ஆட்சியில் அமரலாம் – ராமதாஸ் அறிவுரை

207 0

சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தினால் பா.ம.க. ஆட்சியில் அமரலாம் என்று பாட்டாளி இளைஞர் சங்கத்தினருக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை வழங்கினார். 

பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாசதுக்கம் அருகே உள்ள அண்ணா அரங்கத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள 40 சதவீத இளைஞர்கள் பா.ம.க.வில் இருக்கிறார்கள். அவர்கள் டாக்டர் அன்புமணி ராமதாசை கோட்டைக்கு அனுப்பும் முயற்சியில் இருக்கிறார்கள். இது காலத்தின் கட்டாயம். அதுமட்டும் அல்ல கட்டளையும் தான்.

இளைஞர்கள் கட்டுப்பாடோடு, கட்சியின் நலன் கருதி மூத்தவர்களையும், நிர்வாகிகளையும் மதித்து செயல்படவேண்டும். மதிக்காமல் செயல்பட்டால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்.

3 எழுத்தில் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பா.ம.க.வும் 3 எழுத்து தான். ஆனால் சில 3 எழுத்து கட்சிகள் தமிழகத்தில் வளராமல், வேரூன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உங்களுடைய கடமை. ஏனென்றால் அந்த 3 எழுத்துகள் ஆபத்தானவை.

சமூக ஊடகங்களை தவறான வழியில் உபயோகிப்பது கட்சிக்கு பெருமை சேர்க்காது. எனவே சமூக ஊடகங்களை கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துங்கள். சரியான திசையில் அதனை பயன்படுத்தினால் நாம் ஆட்சியில் அமரலாம்.

இந்தியாவில் உள்ள கட்சிகளுக்கே பா.ம.க. வழிகாட்டியாக திகழ்கிறது. எனவே வெறுப்பு அரசியலை உமிழ்பவர்கள், அவதூறு அரசியலை வளர்ப்பவர்களிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ரத்தம் தானம் செய்யுங்கள். ரத்த தான முகாம்கள் வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள வேறு எந்த கட்சியிலும் இளைஞர்கள் கிடையாது. எங்களைப்போல இளைஞர்களை கூட்ட முடியுமா? என்று மற்ற கட்சிகளுக்கு நான் சவால் விடுக்கிறேன். திராவிட கட்சியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டு, காப்பாற்றவேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாம் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்று பூரண மது விலக்குக்கு முதல் கையெழுத்து போடும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழகத்தில் எல்லோரும் விளையாடி முடித்துவிட்டார்கள். தற்போது களம் காலியாக இருக்கிறது. இனிமேல் நாம் தான் அந்த களத்துக்கு சென்று விளையாட போகிறோம்.

ராணுவ கட்டுப்பாடுடன் அனைவரும் இருக்கவேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து உங்களுடைய அண்ணன் ஆகிய நான் நிற்பேன்.

கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த நிமிடமே உங்களுடைய ஆட்சி இருக்காது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை காக்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் ம.திலகபாமா உள்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பாட்டாளி இளைஞர் சங்கத்தினர் வெள்ளை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்தவாறு பங்கேற்றனர்.

Leave a comment