மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லையில் ஒன்றுகூடுவோம் -சத்தியலிங்கம்

335 0

தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள சனநாயக ரீதியான மக்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினரும் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமாகிய வைத்தியர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவரால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

1980 களிலிருந்தே தமிழ் மக்களின் பூர்வீக தாயக பூமியான வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் வகையிலான திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நடைபெற்றுவந்துள்ளன. எனினும் தமிழ்மக்களின் ஆயுதபலம் ஓங்கியருந்த நிலையில் இவை சிங்கள அரசுகளால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

ஆயுதபோராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் சிங்கள அரசு தனது வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. மகாவலி எல் வலயத்திட்டத்தினூடாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் மட்டுமல்ல வடக்கின் வன்னி யாழ்மாவட்டங்களை நிலத்தொடர்பின்றி பிரிப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.

தற்போதைய காலநிலை மாற்றத்தால் எமது விவசாயிகள் நீரின்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது கஸ்டப்படுகின்றனர். எனவே தெற்கிலுள்ள இயற்கையான ஆறுகளிலிருந்து கடலிற்கு வழிந்தோடும் மேலதிக நீரை வடக்கு மாகாணத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு கொண்டுவருவது வரவேற்ககூடியதொன்று.

எனினும் கடந்தகால  கசப்பான அனுபவம் தண்ணீர்வருவதற்கு முன்னர் குடியேற்றங்கள் வந்துவிடுமென்பதே. அதனாலேயே இதனை நாங்கள் எதிர்கின்றோம்.

அத்துடன் மகாவலி அதிகாரசபை இலங்கையின் சாதாரண காணிச்சட்டங்களிற்கு அப்பால்பட்ட அதிகாரங்களை கொண்டுள்ளது. மாவட்ட, பிரதேச நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக ஜனாதிபதியின் கீழ் இயங்கும் அதிகாரசபையாகும்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி அவர்கள் நேரடியாக தலையிட்டு தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் உறுதிப்படுத்தவேண்டி அரசாங்கத்திற்கு நெருக்குதலை கொடுக்கும் முகமாக எதிர்வரும் 28.ஆம் திகதி முல்லைத்தீவில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள வெகுசன போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment