யாழ் ஊடகவியலாளர் உதயராசா சாளின் உட்பட ஐவர் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

311 0

பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர் தனித்தனியாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றினைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வீதி வலம் வந்திருந்தார்.

இது தொடர்பிலேயே விசாரணைக்காக ஊடகவியலாளர் உட்பட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

அனைவரது வீட்டுக்கும் இன்று சனிக்கிழமை சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு துண்டுகளை அனைவரிடமும் கையளித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர், மானிப்பாய், யாழ்ப்பாண பொலிசார், மற்றும் கோப்பாய் இராணுவத்தினர் ஆகியோர் பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டு, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்களையும் பல தடவைகள் பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்தும் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இறுதியாக யாழ்ப்பாண பொலிசாரால் இந்து இளைஞர் மன்றம் மற்றும் நிர்வாக சபையின் தலைவர் செயலார் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, இவ்வாறன சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெற கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டு விசாரணைகளை முடிவுறுத்துவதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீளவும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்காக ஆலய உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ள அதேவேளை 22ஆம் திகதி ஊடகவியலாளர் உ.சாளின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வரைபடம் தமிழீழத்தை நோக்கமாக கொண்டு அலங்கரிக்கப்பட்டதல்ல எனவும், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது சாதரணமாக இலங்கை பாடப்புத்தகங்களிலும் உள்ளது. அதனை தவிர இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என ஆலயத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த ஆலய நிர்வாகத்தில் குறித்த ஊடகவியலாளர் இல்லாத போதிலும், விசாரணைக்காக அழிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment