ரவிகரன் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை!

192 0

கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் நடவடிக்கையினையும் சுருக்குவலையினையும் தடைசெய்ய கோரி கடந்த 02 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரியால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கு அமைவாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையினை தொடர்ந்து நேற்று வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரினால் போராட்டத்தில் ஈடுபட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மீனவ அமைப்புக்களின் தலைவர் செயலாளர்கள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்படி கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எம்.தொம்மைப்பிள்ளை, செல்வபுரம் கடற்தொழிலாளர் கூட்டுறவு அமைப்பின் பொருளாளர் ஏ.ஜெயராசா, கடற்தொழிலாளர் சம்மேளன உப தலைவரும் தீர்த்தக்கரை அன்னை வேளாங்கன்னி கடற்தொழில் அமைப்பின் தலைவருமான வி.அருள்நாதன்,

செல்வபுரம் கடற்தொழில் அமைப்பின் தலைவர் ஜெறோம்திலீபன், கடற்தொழில் அமைப்பின் தலைவர் பே.பேரின்பநாதன், கோவில் குடியிருப்பு கடற்தொழில் அமைப்பின் தலைவர் ம.மிரண்டா அன்ரனி ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் என். சுதர்சன் அவர்களின் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போது இவர்கள் நிபந்தனையில் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை போராட்ட இடத்திற்கு செல்ல கூடாது என்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றில் கைஒப்பம் இடவேண்டும் என்றும் பதில் நீதிபதி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment