அவசரமாகச் சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி

205 0

சேலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்று இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை நடக்க இருந்த தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்பினார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக நேற்று மாலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால், காவேரி மருத்துவமனையின் முன் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குழுமி இருக்கிறார்கள். இவர்களை கலைந்து செல்லக் கோரி போலீஸார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் ஏற்பட்டு மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது உடல்நிலை சீராகி வருகிறது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஆகவே கழகத் தோழர்கள் அனைவரும் எவ்வித அசம்பாதவிதங்களுக்கும் இடம் கொடுத்துவிடாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அமைதி காத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை 3 நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றிருந்தார். அங்கு பல்வேறு நலத்திட்டங்களை கடந்த இரு நாட்கள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, திங்கள்கிழமை காலை மாநகராட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணத் தி்ட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை பார்ப்பார் என்று செய்தி பரவிய நிலையில் விமான நிலையத்திலிருந்து நேராக தனது இல்லத்துக்கு சென்றார்.

Leave a comment