காவிரியில் தமிழகத்துக்கு 66 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

307 0

கர்நாடகாவில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 66 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை 2-ம் வாரத்தில் முழு கொள்ளளவை எட்டின. இதனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த 20-ம் தேதி மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், மைசூரு மாவட்டத்தில் உள்ள க‌பினி உள்ளிட்ட அணைகளுக்கு சமர்ப்பண பூஜை செய்தார்.

1.20 லட்சம் கனஅடி

இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 1.20 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்ப‌ட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவின் அளவு குறைந்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 44 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரி, மடிகேரி, பாகமண்டலா உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.  நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 122.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 34,740 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 40,780 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,284.71 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,282.84 அடியாக உள்ள‌து. அணைக்கு வினாடிக்கு 24,215 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 26,200 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இரு அணைகளிலும் இருந்து மொத்தமாக தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 66 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப் பட்டுள்ளது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment