காலம் தந்த கலங்கரைவிளக்கம்!

7152 0

கல்வி தந்த மகுடம்!

எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக உயர்ந்தவர் அப்துல் கலாம். ராமேஸ்வரத்தில் படகுக்காரராகத் தொழில் செய்துவந்த ஜெய்னுலாபுதீன், ஆசியம்மா தம்பதிக்கு 1931 அக்டோபர் 15 அன்று பிறந்த அப்துல் கலாம், படிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். நான்கு சகோதரர்கள், ஒரு சகோதரி என்று பெரிய குடும்பம். சற்றே வசதியான பின்புலம் இருந்தாலும், ஒரு கட்டத்தில் தொழில் நொடித்ததால் குடும்பம் வறிய நிலைக்குச் சென்றது. குடும்பத்தின் நிலையை நன்குணர்ந்த கலாம், பள்ளி நாட்களிலேயே நாளிதழ் விநியோகிக்கும் பணியைச் செய்தார். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில், இரவில் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எந்த நிலையிலும் நம்பிக்கையைக் கைவிடாதவர். ராமநாதபுரத்தில் பள்ளிப் படிப்பு, திருச்சி செயிண்ட் ஜோஸப் கல்லூரியில் இயற்பியல், சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் வானூர்தி தொழில்நுட்பப் பொறியியல் என்று தனது அறிவுத் தேடல் மூலம் உயர் கல்வியைச் சாத்தியமாக்கிக் கொண்டவர். தென்கோடி ராமேஸ்வரத்தில் பிறந்த கலாமின் புகழ், வடகோடி டெல்லியின் அதிகார வாசல் வரை பரவியது.

அறிவியல் பயணம்

சென்னை எம்.ஐ.டி-யில் வானூர்திப் பொறியியல் படிப்பை முடித்தவுடன் டிஆர்டிஓவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பின்னர், ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் எஸ்டாப்ளிஷ் மெண்ட்டில் பணி. இஸ்ரோவில் பணிபுரியும் வாய்ப்பும் தேடிவந்தது. ராக்கெட் பொறியாளராக கேரளத்தின் தும்பாவில், புதிதாக அமைக்கப்பட்ட ராக்கெட் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியிருக்கிறார். தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அமெரிக்க விண்வெளித் துறையான நாஸாவில் ஆறு மாத காலப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியா திரும்பிய பின்னர், எஸ்.எல்.வி. ராக்கெட் திட்டத்தின் தலைவரானார். அக்னி-1 ஏவுகணை, ப்ருத்வி ஏவுகணை தயாரிப்பில் அவரது பங்கு மிகப் பெரியது. ‘ஏவுகணை மனிதர்’ என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

தோல்வியை மதித்தவர்

தோல்விகளைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டவர் அப்துல் கலாம். அதுவே அவரது வெற்றியின் காரணமும்கூட. தோல்விக்கான பொறுப்பைப் பிறர் மீது சுமத்தாமல் தன் தோள் மீது சுமந்துகொண்டவர். 1979-ல் ரோகிணி என்னும் சிறிய ரக செயற்கைக்கோளை ஏவும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டபோது, அதற்கு முழுப் பொறுப்பேற்றார். அதேசமயம், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, வெற்றியைச் சாத்தியப்படுத்தக் கடுமையாக உழைக்கவும் தயங்காதவர் அவர். தொடர்ந்து 18 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைத்தவர் என்பதை அவருடன் பணியாற்றியவர்கள் நினைவுகூர்ந்திருக்கிறார்கள். 1980 ஜூலை 18-ல் எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ரோகிணி செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தி ராக்கெட் யுகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்ததில் கலாமின் பங்கு அதிகம். அந்தத் திட்டத்தின் தலைவர் அவர்தான்!

அறிவியல் ஆசான்

இந்திய அறிவியல் துறையில் மிகவும் மதிக்கப்படும் கலாம், அறிவியலாளர்களை ஊக்குவிப்பதிலும் தனித்த அக்கறை கொண்டவர். குடியரசுத் தலைவராக இருந்தபோது, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்களைக் கவுரவிக்க முடிவுசெய்தார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும், அறிவியல் துறையின் புதுமையாளர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கவுரவித்துவருவது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சிறந்த அறிவியலாளருக்கு ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ விருதை வழங்கிவருகிறது தமிழ்நாடு அரசு. சான்றிதழுடன் ரூ. 5 லட்சம் ரொக்கமும் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகின்றன!

மதங்களைக் கடந்தவர்

மதங்களைக் கடந்த ஆன்மிக நம்பிக்கை கொண்டிருந்தது கலாமின் தனிச்சிறப்பு. மதங்களைத் தாண்டிய விரிவான பார்வையைத் தனது தந்தையிடமிருந்து நேரடியாகப் பெற்றவர். ராமேஸ்வரம் கோயிலின் தலைமைக் குருக்கள் பக்‌ஷி லட்சுமண சாஸ்திரியும் கலாமின் தந்தையும் நெருக்கமான நண்பர்கள். “இருவரும் தத்தமது பாரம்பரிய ஆசார உடையணிந்து ஆன்மிக விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பார்கள்” என்று தனது ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். தங்கச்சிமடம் தீவு தேவாலயப் பாதிரியார் பேடலும் கலாமின் தந்தைக்கு நெருங்கிய நண்பர். “புதுமை புனையும் சிந்தனைகளுக்கு ஒரு தூண்டுசக்தி பிரார்த்தனையில் பிறக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்று கூறியவர் அவர். “கெட்ட மனங்கள் ஒன்று சேர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது நல்ல மனங்கள் ஒன்று சேர்ந்து அதை எதிர்க்க வேண்டும்” என்று பயங்கரவாதம் குறித்து தனது கருத்தை ஆழமாகப் பதிவுசெய்தவர். “மறுபிறவி என்று ஒன்று இருந்தால் நான் மீண்டும் இந்தியாவில் பிறக்கவே விரும்புகிறேன்” என்றார்!

மனிதாபிமான மாண்பாளர்!

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 முதல் 2007 வரை பதவி வகித்தார் அப்துல் கலாம். அந்த ஐந்தாண்டுகளில், எத்தனையோ பேர் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரைச் சந்தித்துப் பேசியிருந்தாலும், அவரது குடும்பத்தினர் மாளிக்கைக்கு வந்து அவரைச் சந்தித்தது ஒரு முறைதான். மாளிகைப் பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் என்று அனைவரிடமும் அன்புடன் பழகியவர். மாளிகையில் வளர்க்கப்பட்ட மான்கள் உள்ளிட்ட பிராணிகள் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். பறவைகளுக்குத் தீனியிடும் சமயங்களில் குழந்தைக்குரிய மகிழ்ச்சியுடன் இருப்பார் என்று நினைவுகூர்கிறார்கள் குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளர்கள்! மரண தண்டனையைத் தன்னால் இயன்றவரை தடுத்திருக்கிறார். தனக்கு அனுப்பப்பட்ட 28 கருணை மனுக்களில் இரண்டு மனுக்கள் தொடர்பாக மட்டும்தான் முடிவெடுத்தார். “நாம் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். செயற்கையான, உருவாக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், ஒரு மனிதரின் உயிரை எடுக்கும் அதிகாரம் மனிதர்களுக்கு இருக்கிறதா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது” என்று கூறியவர் அவர். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மரண தண்டனை ரத்துசெய்வது தொடர்பான வரைவு அறிக்கை ஒன்றை மத்திய சட்ட ஆணையம் தயாரித்து, பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்டபோது, மரண தண்டனைக்கு எதிராகக் கருத்து தெரிவித்த மிகச் சிலரில் கலாமும் ஒருவர்.

இளகிய மனதுக்காரர்!

எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் தயாரிப்பில் முக்கியப் பங்குவகித்தவர்.. அக்னி, ப்ருத்வி ஏவுகணைகளை உருவாக்கி இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரித்தவர் என்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். எனினும், செயற்கைக்கோள் திட்டங்களில் மகிழ்ந்ததைவிட மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான இலகு ரக செயற்கைக் கால்கள் தயாரிப்பில் ஈடுபட்டதே தனக்கு மனநிறைவைத் தந்தது என்றவர் கலாம். 400 கிராம் எடை கொண்ட லேசான செயற்கைக் கால்களை உருவாக்கியதுதான் தனது உண்மையான வெற்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

குழந்தைகளின் நாயகன்!

நாட்டின் குடியரசுத் தலைவர் எனும் மிகப் பெரிய பதவியில் இருந்தபோதிலும், குழந்தைகளுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தவர் கலாம். குடியரசுத் தலைவராக அவர் பதவி வகித்தபோது அவரது மாளிகை குழந்தைகளின் வருகைக்காக எப்போதும் தயாராக இருந்தது. தன்னைச் சந்திக்க வந்த கடைசிக் குழந்தை தன்னிடம் பேசும் வரை, எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பார். பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்தால் தவறாமல் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். தனது வாழ்வின் அனுபவங்களை, வெற்றி, தோல்விகளுக்குப் பின்னே இருக்கும் போராட்டங்களை எளிய மொழியில் குழந்தைகளுக்குச் சொல்லி உற்சாகப்படுத்தியவர். குழந்தைகளில் ஒருவராகக் கலந்துரையாடியவர். குழந்தைகள் நிறைய கேள்வி கேட்கவும், கருத்துகளைச் சொல்லவும் ஊக்கப்படுத்தியவர். ‘கனவு காணுங்கள்’ எனும் சக்திவாய்ந்த வாசகத்தால், எதிர்காலம் மீதான நம்பிக்கையைக் குழந்தைகள் மத்தியில் விதைத்தவர்.

Leave a comment