தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

மோடி அரசின் கீழ் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு, ஆம் என 8 சதவீதம் மக்களே கருத்து தெரிவித்துள்ளனர். பாதியளவு பலன் பெற்றதாக 23 சதவீத மக்களும், பலன் பெறவில்லை என 61 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்கவில்லை.
இதேபோல் காவிரி ஆணையம் அமைய காரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசுதான் என 14 சதவீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கேள்விக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அதிக ஆதரவை அளித்துள்ளனர். 41 சதவீத மக்கள் உச்ச நீதிமன்றத்தால் காவிரி ஆணையம் அமைந்ததாக கூறியுள்ளனர். அ.தி.மு.க. காரணம் என என 21 சதவீத மக்களும், எதிர்க்கட்சிகள் காரணம் என 24 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் பலன் பெற்றதா? என்ற கேள்விக்கு அருமை என 10 சதவீத மக்களும், நன்று என 11 சதவீத மக்களும், சராசரி என்று 28 சதவீத மக்களும், சரியில்லை என 35 சதவீத மக்களும், மோசம் என 16 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
2016ல் கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதா..? என்ற கேள்விக்கு ஆம் என 11 சதவீதம் பேரும், ஓரளவு என 28 சதவீதம் பேரும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

