டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு: மலர் தூவி வரவேற்றார் முதல்வர் பழனிசாமி

231 0

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டு, தண்ணீருக்கு மலூர் தூவி வரவேற்றார்.

மேட்டூர் அணை மொத்தம் 120 அடி கொள்ளளவு கொண்டது. அணை கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100 அடியைக் கடந்துள்ளது. செவ்வாய்கிழமை காலை விநாடிக்கு 1,07,064 கனஅடியாக இருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை விநாடிக்கு 1,04,436 கனஅடியாக குறைந்தது.

புதன்கிழமை இரவு அணை நீர்மட்டம் 105 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 71 டிஎம்சி-யாக அதிகரித்தது. அணை பகுதிகளில் ஏற்கெனவே, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் அணை முழுக்கொள்ளளவை எட்டவுள்ள நிலையில், அணையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி கரையோரப் பகுதி கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, பாசனத்துக்காக வியாழக்கிழமை காலை முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். பின்னர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரில் முதல்வர் மலர் தூவினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, அன்பழகன், கருப்பணன், எம்.ஆர். விஜயபாஸ்கர், சரோஜா, பொதுப் பணித் துறை முதன்மை செயலர் பிரபாகர், சேலம் ஆட்சியர் ரோஹிணி மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு இரவு 10 மணி அளவில் விநாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிக்கப்படும்.

மேட்டூர் அணையை திறநத முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பதும், இதுவரை எந்த முதல்வரும் நேரடியாக அணையை திறந்து விட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment