தமிழர்களின் காணி அபகரிப்பை அரசு நிறுத்தவேண்டும்- ஸ்ரீநேசன்

232 0

நாங்கள் வருடக்கணக்கில் இங்கிருந்து காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம், காணி அதிகாரத்தை பேசிக்கொண்டிருக்கும்போது எமது வடக்கு கிழ க்கு மாகாணங்களில் பல காணிகள் வனஇலாகா, வன ஜீவராசிகள் திணைக்களங்களாலும், மகாவலியாலும் மற்றும் அரச காணி, புனித தலங்களுக்கான நிலம் என்ற அடிப்படையிலும் இப்போது மறைமுகமாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது இச் செயற்பாட்டை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள தமது அலுவலகத்தில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நான் அறிந்தவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் ஆணையாளராக இருக்கின்ற ஒருவர் வாகரையில் 500 ஏக்கர் காணியை படையினருக்கு வழங்க வேண்டும் என்று அவர் ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாக அறிய முடிகின்றது. இதேபோன்று ரணவிரு படையினருக்காக 25 ஏக்கர் காணியை வாகரை பிரதேசத்தில் வழங்க வேண்டும் எனும் செய்தியை அத்துடன் மட்டக்களப்பு புனானை கிழக்கு பிரதேசத்தில் உள்ளடக்கியதாக ஒரு பௌத்த நிலையத்தை நிறுவவேண்டும் எனும் செயற்பாடும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

என்னவெனில், நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்திற்கு எதிரான முரண்பாடான செயற்பாடுகளை செய்யக் கூடாது. ஆனால் இன்று நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டு மட்டக்களப்பில் மட்டுமல்ல அம்பாறை, திருகோணமலை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணிகள் ஏதோ ஒரு விதத்தில் பலவிதமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

இதில் ஒன்று அரச காணி என்று சொல்கின்றார்கள், மகாவலி காணி என்று சொல்கின்றார்கள், எல்.ஆர்.சீ நிலம் என்று கூறுகின்றார்கள் இதைவிட வன பரிபாலன திணைக்களத்தின் காணி என்று சொல்கின்றார்கள், வன ஜீவராசிகளுக்குரிய நிலம் என்று சொல்கின்றார்கள். அதுமட்டுமல்ல புனித நிலம் என்றுகூட பல நிலங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு வருகின்றது.எனவே இந்தப் பிரகடனத்தின் மூலமாக எதிர்காலத்தில் மக்களுக்கு குடியேறி வாழ்வதற்கு நிலம் இல்லாமல் போகக் கூடிய சூழ்நிலை இருக்கின்றது.

எனவே நாங்கள் வருடக்கணக்கில் இங்கிருந்து காணி அதிகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எமது பிரதேச காணிகள் மறைமுகமான பல வழிகளாலும் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

காணிகளை அநாவசியமாக அபகரிப்பதும் ஒருவகையில் ஜனநாயகரீதியான ஒரு உரிமை மீறலாகத்தான் பார்க்கப்படும், ஏனென்றால் இந்தக் காணிகள் எமது மக்களின் எதிர்கால அபிவிருத்திக்கு தேவையான ஒரு பொருளாதார காரணியாக இருக்கின்றது.

எனவே இப்படி காணிகளையும் வளங்களையும் மையமாக வைத்துக்கொண்டு பாதுகாப்பு என்ற பெயரில் நகர்த்தப்படும் ஒவ்வொரு செயற்பாடும் தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சிமீது சந்தேகத்தை எற்படுத்தியுள்ளது. எனத் தெரிவித்தார்.

Leave a comment