கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா

666 0

preview-9கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை  மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற  தேர்வுகளுக்குத் தோற்றி, பட்டம் பெறுவதற்கான தகமைசார் நியதிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குப் பட்டங்களை  வழங்குவதற்கான பட்டமளிப்பு விழா 2016.06.18 ஆம் நாள் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள றயசன் பல்கலைக் கழகத்தில்நடைபெற்றது.

சரியாக முற்பகல் 10:45 மணிக்கு கனடாத் தமிழ்க் கல்லூரி இயக்குநர் அவை உறுப்பினர்கள், கனடாத் தமிழ்க் கல்லூரியில் கற்பிக்கும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் விழா மண்டபத்துக்கு வருகை தந்தனர்.

முற்பகல் 11:00 மணிக்குத்தலைமை விருந்தினர் பேராசிரியர் கண்ணன் நாராயணசாமி அவர்கள் வருகை தந்தார் கனடாத் தமிழ்க் கல்லூரி முதல்வர் திருசண்முகம் குகதாசன் தலைமை விருந்தினரை வரவேற்று, இயக்குநர் அவை உறுப்பினர்களுக்கும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் அறிமுகம் செய்தார். கனடாப் பண் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியன இசைத்தலோடு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின.

முதலாவது நிகழ்ச்சியாகக் கனடாத் தமிழ்க் கல்லூரி முதல்வர் வரவேற்பு மற்றும் செயற்பாட்டு உரையை ஆற்றினார். அவர் தனதுஉரையில் “கனடாத் தமிழ்க் கல்லூரியானது, தமிழ் மொழியைக் கற்பிக்கவல்ல நல்லாசிரியர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கோடும், எமது தாயகத்திலே நிலவிய போர்ச்சூழலிலே தமது பட்டப்படிப்பை முடிக்க இயலாமல் புலம்பெயர்ந்து இங்கு  வந்தோருக்கும், தரப்படுத்தல் முறையால் பல்கலைக்கழகம் புக முடியாமல் போனோருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் விருப்போடும்,தமிழ், தமிழர் பற்றிய அறிவைப் பெருக்க விழைவோரின் விருப்பை நிறைவேற்றும் பொருட்டாகவும் தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து 1999 ஆம் ஆண்டு முதல் தமிழ் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்புகளை நடத்திவருகின்றது” என்றார்.

இப்பட்டப்படிப்புத் தொடங்கிய நாள் முதலாக இன்று வரை நான்கு தொகுதி மாணவர் இளங்கலைத் தமிழ்ப் பட்டப்படிப்பை முடித்துப்பட்டம் பெற்றுள்ளனர். ஐந்தாவது தொகுதி இளங்கலை மாணவர் இன்று பட்டம் பெறவுள்ள அதே வேளையில் தமிழ் முதுகலைப்  பட்டப்படிப்பை வெற்றியாக நிறைவுசெய்த முதலாவது தொகுதி மாணவரும் இன்று பட்டம் பெறவுள்ளனர் என்பதைக்  கூறிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

ஐந்து தொகுதித் தமிழ் இளங்கலை மாணவரும், ஒரு தொகுதி முதுகலை மாணவரும் தமிழியல் பட்டம் பெறுவதைக் கைகூட வைத்தபேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் இந்தவேளையில் நன்றியோடு நெஞ்சில் நிறுத்துவதாகக் கூறினார்

இறுதியாக, இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெறவுள்ளோரை வாழ்த்திக் கொண்டு. கனடாவில் தமிழ்மொழி, மற்றும் தமிழ்ப்  பண்பாட்டு விழுமியங்களைப் பேணிக் காப்பதனையும், அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதனையும்  உறுதிப்படுத்தும் கனடாத் தமிழ்க் கல்லூரி முயற்சிக்குத் தங்கள் அனைவரினதும் ஆதரவை வேண்டித் தனது உரையை நிறைவு  செய்தார்

அடுத்துத் தலைமை விருந்தினர் பேராசிரியர் கண்ணன் நாராயணசாமி அவர்களைப் பட்டமளிப்பு உரையை ஆற்றினார். அவர் தனதுஉரையில் “நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை யாத்தளித்த பெருந்தகை,‘மனோன்மணியம்’ எனும் முதற் காப்பிய நாடகத்தைத் தமிழில் உருவாக்கி வழங்கிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் பெயரைத்தாங்கி, தமிழகத்தின் தென் கோடியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தனது கல்விப் பணியைச் சீரும்  சிறப்புமாக நிறைவு செய்துள்ள இந்த இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா ஆண்டிலே, உங்களுக்குப் பட்டங்களை வழங்குவதில்  மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்வதாகக் கூறினார்

“தமிழ் மொழியில்- அதன் இலக்கண, இலக்கிய வகைப்பாடுகளில்- நீங்கள் பெற்றுள்ள புலமைக்கும, அறிவாற்றலில் ஆழ-அகலத் தடம் பதித்துள்ளமைக்கும் சான்றாக இப்பட்டங்கள் உங்களுக்கு வழங்கப் படுகின்றன. மதிப்புறு சான்றோர்களாக உங்களை  உருவாக்கியதில் மிகப்பெரும் பங்காற்றியுள்ள கனடாத் தமிழ்க் கல்லூரிக்கும், கல்லூரி முதல்வருக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும்,இயக்குநர் அவை உறுப்பினர்களுக்கும் தனது உளமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்பதகக் கூறினார்

“ஈழத்திலே நிலவிய போர்ச்சூழலிலே புலம் பெயர்ந்தாலும் தமிழ்மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க்கலைகளையும் சொந் த நாட்டோடு விட்டுவிடாமல் இந்த  நாட்டுக்கும் கொண்டு  வந்து போற்றிப் புரப்பது பெருமை தரும் செயலாகும். முதற் தலைமுறையினர்  நாடு விட்டு நாடு வந்தவர்களாக இருப்பினும், கனடாவில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறையினர் பல்வேறு துறைகளிலும்  சிறந்து விளங்குவதறிந்து புளகாங்கிதம் அடைகின்றேன்” என்றார்

தமிழ்க் குமுகத்தின் பொது வெளியைக் கட்டமைப்பதில் இணையமும் இணையத் தமிழும் சிறப்பான பங்களிப்பை ஆற்றிவருகின்றன.மொழி-இன- பண்பாட்டு அடையாளத்தை மீட்டெடுப்பதற்கும், மீட்டுருவாக்கம் செய்வதற்கும், வளர்த்தெடுப்பதற்குமான செயல்திறன்  மேம்பாட்டில் தமிழியலில் இன்று பட்டங்கள் பெறும் நீங்களும் இணைந்து பங்காற்றிடுமாறு இவ்வேளையில் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாகக்“ கூறினார்

“உலகமயமாக்கலின் ஊடாகத் தொழில்மயம், நகரமயம், புதுமைமயம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களினால் தனிமனித வாழ்க்கையும்,குடும்பம் என்ற அடிப்படைக் குமுக நிறுவனமும் பெரும் மாற்றங்களை எதிர் கொண்டுள்ளன. கூட்டுக் குடும்பங்கள் சிதறிதனிக்குடும்பங்களாக உருவெடுத்து, மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்குமான இடைவெளியும் விரிசல்களும் பெருகி,முதியோர் இல்லங்கள் புகலிடமாகிப் போகும் போக்கு அதிகரித்து வருவது கவலை தருவதாகும்.

பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் அருகிப் போவதும், திருமண கட்டுக்குள் நுழைய மறுக்கும் இல்வாழ்க்கையும் காலத்தின் கோலமாகிப் போனது.இப்பேரழிவிலிருந்து முடிந்தவரை உங்களையும் கனடாத் தமிழ்க் குமுகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பெற்றுள்ளதழிழறிவை அடுத்த தலைமுறையும் பெற்றுக்கொள்ள ஆவன செய்யுங்கள். உங்கள் வழித்தோன்றலர் தமிழ்மொழியையும் தமிழ்ப்பண்பாட்டையும் போற்றி வாழ வழி சமையுங்கள்” என்ற அறிவுரையோடு தனது பேச்சை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து பட்டமளிப்புத் தொடங்கியது. பட்டம் பெறுவோர், அவரவர் பட்டப்படிப்புகளைப் படித்துத் தேர்வு எழுதி, வெற்றி பெற்றுப் பட்டம் பெறத் தகுதியானதை உறுதிப்படுத்தும் பொருட்டாகக் கல்லூரியின் பட்டப்படிப்புத்துறை மூத்த ஆசிரியர்களான  பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி, முனைவர் பார்வதி கந்தசாமி ஆகியோர் மாணவருக்குக் கழுத்துப் பட்டியை அணிந்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மாணவர், தலைமை விருந்தினரிடம் சென்று பட்டத்தைப் பெற்றனர் முதலில் இளங்கலைப் பட்டமும் தொடர்ந்து  முதுகலைப் பட்டமும் வழங்கப்பட்டன.

அடுத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சார்பில், தலைமை விருந்தினர் பேராசிரியர் கண்ணன் நாராயணசாமி  அவர்கள் கனடாத் தமிழ்க் கல்லூரிப் பட்டப்படிப்புத் துறை ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்து மதிப்பு அளித்தார் .

இறுதியாகப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டியும் தேநீரும் வழங்கப்பட்டன. நண்பகல் ஒருமணியளவில் பட்டமளிப்பு விழா நிறைவு எய்தியது.

Leave a comment