கழிவறை, தூங்கும் வசதியுடன் அரசு சொகுசு பஸ்கள் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

310 0

தமிழகம் முழுவதும் கழிவறை, தூங்கும் வசதியுடன் கூடிய 515 அரசு சொகுசு பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக 21,744 பேருந்துகளை, நாள்தோறும் 87.22 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி வருகிறது.

1 கோடியே 80 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை) 40 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 60 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 78 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 172 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 64 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 69 பேருந்துகளும், என 134 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 515 புதியபேருந்துகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பொது மக்களின் பயன் பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்புதிய பேருந்துகளில், அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகவரலாற்றில் முதன் முறையாக, குளிர்சாதன வசதி படுக்கையுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள் ஆகிய பேருந்துகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று முதல் இயக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #

Leave a comment