ஜெயலலிதாவுக்கு ராஜதுரோகம் செய்தவர் தினகரன் – சீனிவாசன் தாக்கு

208 0

ஜெயலலிதாவுக்கு ராஜதுரோகம் செய்தவர் டி.டி.வி.தினகரன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் பேசினர்.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியையும், ஆட்சியையும் திறம்பட நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. எங்களுக்குத் தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையமே கூறி விட்டது. ஆனால் ஒரு நபர் எப்படியாவது அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் அபகரிப்பேன் என்கிறார். அவர் வேறுயாருமல்ல ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரன்தான்.

அவரது நடவடிக்கைகளை கடந்த 32 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். ஜெயலலிதா மீது தி.மு.க. வினர் தொடர்ந்த லண்டன் ஓட்டல் வழக்கில் தினகரனும் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் அவர் தி.மு.க.வுடன் ரகசிய உடன்பாடு வைத்து தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவித்துக்கொண்டார்.

இதனை அறிந்த ஜெயலலிதா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய், இனி நான் சாகும்வரை என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று கட்சியை விட்டு தினகரனை தூக்கி எறிந்தார். ஜெயலலிதாவுக்கு தினகரன் ராஜதுரோகம் செய்த காரணத்தால் அவர் விரட்டப்பட்டார்.

அதன் பிறகு பாண்டிச் சேரியில் தினகரன் பதுங்கி இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறார். அவரது மாய வலையில் தொண்டர்கள் விழ வேண்டாம்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்று எல்லோருக்கும் தெரியும். 20 ரூபாய் நோட்டை காட்டி தினகரனை தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர் நெல்லை, விருதுநகர் என்று சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய தினகரனை இப்போது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மோசடி நபர் அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன் என்கிறார்.

தினகரனை நம்பி சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் சகதியில் காலை விட்டவர் கதைபோல இருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தொகுதியிலும் வளர்ச்சி பணிகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.

ஏனென்றால் அந்த எம்.எல்.ஏ.க்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் ரத்தத்தை சிந்தி வெற்றியை பெற்று தந்தார். ஜெயலலிதாவுக்காக மக்கள் வாக்களித்தனர்.

எனவே தான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து வளர்ச்சி பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. மீது வீண்பழிகளை சுமத்தி வருகிறார்கள். அது மக்கள் மன்றத்தில் எடுபடாது.

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, சேலம் 8 வழிச்சாலை திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மக்களை தூண்டிவிட்டு சிலர் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். பொதுமக்களை குழப்பி வரும் சமூக விரோதிகள் மீது அ.தி.மு.க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அ.தி.மு.க. மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். எனவே மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளது. தற்போது நாம் அனைவரும் பெருமைப்படும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு கிடைத்துள்ளது. இது அ.தி.மு.க.அரசு செய்த மகத்தான சாதனையாகும். இதன் மூலம் 19 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment