ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு – இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு

172 0

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளதால் நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த பேரத்தை செய்து முடிப்பதற்காக, ரூ.423 கோடி லஞ்சம் கைமாறியதாக வெளியான தகவலையடுத்து, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த லஞ்ச விவகாரம் குறித்து சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட 3 பேரில் ஒருவரான இத்தாலியை சேர்ந்த கர்லோ கெரோசாவை (வயது 71) பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது. இதன்பேரில், இத்தாலி போலீசார் கர்லோ கெரோசாவை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அக்கோரிக்கையை இத்தாலி நிராகரித்துள்ளது. இந்தியாவுடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் எதுவும் இல்லாததை அந்நாடு சுட்டிக்காட்டி உள்ளது.

இது, சி.பி.ஐ.க்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும், வேறு விதிமுறைகளின் கீழ், கெரோசாவை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.

Leave a comment