செய்யூரில் 2-வது விமான நிலையம்!

219 0

செய்யூரில் 2-வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராமங்களின் வரைபடங்களை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது சர்வதேச விமான நிலையம் 1,300 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு 2 வது ஓடுதளம் அமைக்கப்பட்டபோதும், தேவையான இடவசதி இலக்கு எட்டப்படவில்லை. விமான சேவைகள் அதிகரிப்பு, சரக்குகளை கையாளும் வசதி போன்றவற்றுக்காக புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய அவசியம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக சென்னையை ஒட்டி பல பகுதிகளில் இடத்தை தேர்வு செய்து, விமான நிலையங்கள் ஆணையத்துக்கு மாநில அரசு பரிந்துரைத்தது. இதில் தற்போது மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. குறிப்பாக, செய்யூர் வட்டத்தில் உள்ள அறப்பேடு, ஆயக்குன்னம் மற்றும் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தொழுப்பேடு பகுதிகள் இந்த 2 ஆயிரம் ஏக்கரில் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால், விமான நிலையம் அமைப்பதற்கு கூடுதல் இடம் தேவைப்படுவதாக விமான நிலையங்கள் ஆணையம் தெரி விக்கிறது.

இந்நிலையில் விமான நிலையத்துக்கான இடம் தொடர்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மாலதி கூறும்போது, “இந்த இடத்தில் விமானம் நிலையம் அமைவது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பான கருத்துரு எதுவும் அனுப்பப்படவில்லை. கிராமங்களின் வரைப்படங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. எதற்காக வரைப்படங்கள் கொடுக்கப்பட்டது என் றும் தெரியவில்லை” என்றார்.

Leave a comment