யாழ் இளைஞனின் சுவாசக் குழாயிலிருந்து மீட்கபட்ட மர்மபொருள்

498 0

இளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் நிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனை வரலாற்றில் நீண்ட காலத்தின்பின்னர் இந்த வகைச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு உட்பட்ட இளைஞனுக்கே இவ்வாறு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் குண்டுத் தாக்குதலில் ஆட்லறி வகையானது என்று நம்பப்படும் குண்டு வெடித்தபோது அதன் பகுதி அவருக்குள் பாய்ந்துள்ளது.

 அது அவரது வலது தோள்மூட்டுக்குக் கீழே முதுகுப் புறமாகத் துளைத்தவாறு உள்ளே சென்றுள்ளது. வவுனியாவுக்கு பொதுமக்களுடன் இடம்பெயர்ந்தார் அவர். வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்குக் குண்டின் பகுதி தாக்கியதாகக் கருதியே சிகிச்சை பெற்றார்.

“நாட்கள் சென்றன, காயம் மாறியது. ஆனால் அதன் பின்னர் என்னால் பாரதூரமான வேலைகளைச் செய்ய முடிய வில்லை. நிமிர்ந்தோ சரிந்தோ படுத்துறங்க முடியாது, குப்புறவே படுத்து உறங்க முடியும். அவ்வாறு படுத்தாலும் இருமல் விடாது இருந்துகொண்டே இருக்கும்”

அதன் பின் “இருமல், சளித் தொல்லை தாங்கமுடியாது 2 வருடங்களின் பின்னர் 2011 ஆம் ஆண்டு கிளிநொச்சி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றேன்.

அங்கு மருத்துவர்கள் எனது நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பின்னர்தான் இரும்புத் துண்டு ஒன்று எனது நெஞ்சறையில் உள்ளது என்று கூறினர். எக்ஸ்ரே கதிர் மூலமாக எடுத்த படத்தையும் காண்பித்தனர். என்னால் அதை நம் பவே முடிய வில்லை” என்றார் காயமடைந்த இளைஞர். பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக் காகக் கொழும்பிலுள்ள இரண்டு மருத்துவமனைக்குச் சென்றும் சிகிச்சை பெறமுடியாது திரும்பிவரவேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்றுவரை சிகிச்சை பெற்றுவந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டார். அங்கு இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.முகுந்தன் பரிசோதனை செய்து சத்திரசிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

“கடந்த வியாழக்கிழமை சுமார் 6 மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை செய்து அந்தப் இரும்புத் துண்டு அகற்றப்பட்டது. குறித்த குண்டின் பகுதி வலதுபுற நுரையீரல் சுவாசக் குழாயில் தங்கி நின்றுள்ளது. அது சுவாசப்பை ஊடாகவே சுவாசக் குழாய்குள் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் அது எப்படி நகர்ந்தது என்பது விசித்திரமாகவே உள்ளது. குண்டின் பகுதி தங்கியிருந்த இடத்தில் சுவாசக்குழாய் விரிவடைந்து குழாய் சேதமடைந்து அதில் சளி தேங்கி அவருக்குச் சிக்கலைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இரும்பினாலான அந்தக் குண்டின் பகுதி சுமார் 50 கிராம் நிறையுடையது” என்று சத்திரசிகிச்சை செய்த மருத்துவ நிபுணர் முகுந்தன் தெரிவித்தார்.

மயக்க மருந்து நிபுணர் பிறேமகிஸ்ணா தலைமையிலா குழு, தாதியர் குழு, மருத்துவ உதவியாளர் குழு ஆகியவற்றின் உதவியுடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

Leave a comment