இராணுவ மேஜர் சிறை செல்வதைத் தடுப்பதற்காக 20 இலட்சம் நிதி சேகரிக்கும் கூட்டு எதிரணியினர்

367 0

mahinda-1-600x400தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை சுட்டுக் கொலை செய்த இராணுவ மேஜர் சிறைக்கு செல்வதனை தடுக்க, கூட்டு எதிர்க்கட்சியினர் நட்ட ஈடு வழங்க உள்ளனர்.

18 ஆண்டுகளுக்கு முன்னதாக இராணுவத்தில் கடமையாற்றிய போது, இராணுவ முகாம் ஒன்றிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை மேஜர் விமல் விக்ரமகே சுட்டுக் கொலை செய்திருந்தார்.

இந்த புலி உறுப்பினரின் உறவினர்களுக்கு 20 லட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நட்டஈட்டுத் தொகையை செலுத்தி இராணுவ மேஜர் சிறைக்குச் செல்வதனை தடுக்க கூட்டு எதிர்க்கட்சி முன்வந்துள்ளது.

இந்த நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்காக நிதி திரட்டப்பட உள்ளது.பன்னிப்பிட்டி தர்மபால சிலைக்கு அருகாமையில் இன்று காலை நிதி திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

20 லட்சம் ரூபா நட்டஈட்டுத் தொகை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக செலுத்தப்பட வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நட்டஈட்டுத் தொகையை செலுத்தத் தவறினால் இராணுவ மேஜருக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தண்டனையிலிருந்து மேஜரை பாதுகாக்கும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சியினர் நிதி திரட்ட உள்ளனர்.மேஜரின் வங்கிக் கணக்கில் இந்த நிதி வைப்பிலிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படுபவர்களை சட்டவிரோதமாக சுட்டுப் படுகொலை செய்த பின்னர் அவர்களை தப்பியோடும்போதே சுட்டதாக பல கொலைச் சம்பவங்கள் மூடிமறைக்கப்படுவதாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.