பாலச்சந்திரனின் பள்ளித் தோழனின் பதிவு.!

12334 0

அந்த பதுங்கு குழிக்குள் இருக்கும் படம் வெளியான அன்று (2013 மாசி) Independent ஊடகத்தில் வந்த அந்த செய்தியின் இணைப்பை சித்திதான் முகநூலிற்கு அனுப்பியிருந்தார். அதற்கு முன்னரே சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருக்கும் படத்தை இணையம் மூலம் பாத்திருந்தேன்.

அப்படத்தை பார்க்கும் போது மனதில் ஏற்பட்ட தாக்கத்தை விட பதுங்கு குழிக்குள் இருக்கும் படத்தை பார்த்தபோது ஏற்பட்டத்தை சீரணிக்க முடியவில்லை. நான் அவரை கண்டு கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அதே முகம் ஆனால் சற்று மெலிந்திருந்தார். கணினி திரையில் பார்க்கும்போது ஏனோ தெரியவில்லை ஒரு முறை நேரே காண்பது போல இருந்தது.

2008 இரண்டாம் தவணை பரீட்சையின் போதுதான் அவரை இறுதியாக கண்டேன். இடப்பெயர்வுகள் காரணமாக அந்த தவணை பரீட்சை இடையே நிறுத்தப்பட்டிருந்தது. அன்று ஏதோ ஒரு பாடத்தின் பரீட்சை முடிந்த கையோடு துடுப்பாட்டம் ஆடுவதற்காக மைதானம் வந்தபோதுதான் யாரோ சொன்னார்கள் நாளையில் இருந்து பரீட்சை இல்லை என்று. மனதில் பெரும் சந்தோசத்துடன் வகுப்பறை நோக்கி கணினி ஆய்வு கூடத்துக்கும் பழைய பின்வாசலுக்கும் இடையிருந்த ஒடுக்கமான பாதையால் ஓடி வந்தேன். அப்பொழுது மெய்ப்பாதுகாவலர் அண்ணா பாலாவை கூட்டிக்கொண்டு வந்தபடி இருந்தார். அன்றுதான் நான் அவரை இறுதியாக கண்டது. என்னோடு படித்த சில நண்பர்கள் 2008 ஒக்டோபர் அளவில் இடம்பெயர்ந்த நிலையில் தர்மபுரம் மகாவித்தியாலையத்தில் நடந்த போட்டி ஒன்றுக்கு பாலா வந்திருந்த நிலையில் அவரை கண்டு கதைத்திருந்தனர். அந்த நண்பர்கள் எல்லாம் பாக்கிய சாலிகள்.

தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல் வகுப்புக்கள் சனி ஞாயிறுகளில் காலையில் இருந்து மதியம் வரை நடக்கும். இடையில் கிடைக்கும் இடைவேளையில் நாங்கள் அனைவரும் ஓடி பிடித்து விளையாடுவோம். நண்பர்கள் அனைவரும் ஒரு அணியாகவும் நண்பிகள் ஒரு அணியாகவும் விளையாடுவோம்.

பாலா வேகமாக ஓடமாட்டார் என்பதால் வேறு வகுப்பறைகளுக்குள் ஒழிந்துவிடுவார். மிகவும் ரகசியமாக பதுங்கி இருக்கும் அவரது நிலையத்தை கண்டுபிடிக்க நணிபிகள் எல்லாம் தேடித்திரிவார்கள். சிலவேளைகளில் ஓடிக்கொண்டிருக்கையிலேயே பிடிபட்டு வட்டத்திற்குள் சிறைவைக்கப்படுவார். நண்பிகள் எதிர்பார்க்காத திசையில் இருந்து ஓடி வந்து சிறையுடைப்பும் செய்திருக்கிறார். 


வைகாசி மாதம் என்றவுடன் இந்த நினைவுகள் எல்லாம் கண்ணுக்குள் நிறைந்து கண்ணீராக வழிந்தபடி இருக்கும்.

‘பிரபாகரனின் மகன்’ என்ற ஒற்றை காரணத்துக்காக எம்மிடமிருந்து எமது பள்ளித்தோழனை, எமது வகுப்பு சகபாடியை பிரித்தெடுத்த உங்களை நாங்கள் ஒரு போதும் மன்னிக்கபோவதுமில்லை, உங்களை ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.

எமது சாவுக்கு பின்னாலும் எமது பிள்ளைகளும் உம்மை பழித்துரைத்துக்கொண்டுதான் இருப்பர். கொல்லத்தான் போகிறீர்கள் என்று முடிவெடுத்திருந்தால் கண்டவுடன் சுட்டிருக்கலாமே? இல்லையென்றால் உங்கள் வீணாய்போன விசாரணைகளை முடித்துவிட்டேனும் கொன்றிருக்கலாமே?

உண்ணக்கொடுத்து பசியாறவைத்து கொன்று தள்ளும் உங்கள் கோர மனநிலையை என்னவென்று கூறுவது. இந்த உலக வரலாற்றில் உங்கள் கோர முகத்தை, சிந்தனையை பதிவுசெய்யாமல் நான் உறங்கபோவதில்லை. அதுவும் ஒருவருக்கு நன்கு தெரிந்து இந்த படுகொலை நிகழ்ந்ததாக கூறுகிறார்கள்.

அப்படியாக அது நடந்திருந்தால், திரௌபதைக்கு துகிலுக்கையில் நிறைந்த சபையில் அதை பார்த்துக்கொண்டிருந்த துரோணரின் முடிவைத்தான் அவர் எட்டுவார்.

தனது மூத்த மகளிற்கு சம வயதானவனை, தனது மகளின் சிறு வயது நண்பனை, தனது பிள்ளையாக பார்த்த ஒருவனை இரக்கமின்றி கொல்லப்போகிறார்கள் என்று தெரிந்தும் அதற்கு எதிர்ப்பிடாமல் அவர் இருந்திருப்பாரே ஆனால் இந்த வரலாற்றின் தண்டனையில் இருந்து அவர் ஒருபோதும் தப்பித்துக்கொள்ள மாட்டார். அவரது கடந்த கால நல்ல செயல்களும் வரலாற்றில் இருந்து மறைந்து சென்றுவிடும்.

தரம் ஒன்றிலிருந்து படித்த மோகனதாஸ் தனுசனை (சுள்ளி) பறித்தெடுத்தீர்கள்.

தரம் மூன்றிலிருந்து படித்த பாலாவையும் பறித்தெடுத்தீர்கள். தரம் ஒன்றில் அறிமுகமான துவாரகனையும் எங்கோ கொண்டு சென்று மறைத்து வைத்திருக்கிறீர்கள்.

இப்படி எம்மிடமிருந்த எல்லாவற்றையுமே கொண்டு சென்றுவிட்டீர்கள். அன்று நாம் வாழ்ந்த மகிழ்வான வாழ்வெல்லாம் இனி எமக்கு இல்லவே இல்லை என்றாகிவிட்டது. எரிந்து முடிந்து எஞ்சிய சாம்பல்களாக அந்த வாழ்வின் நினைவுக்கள் தான் எம்மிடம் எஞ்சிக்கிடக்கின்றன.

தயவோடு அவற்றையும் எம்மிடமிருந்து பறித்தெடுத்துச்சென்று எம்மை சித்தம் தளர்ந்தவராக ஆக்கிவிடாதீர்கள். அந்த நினைவுகளுடனாவது நாம் வாழ்ந்துவிட்டு செத்துப்போகிறோம்.

சுவர்ணமயூரன்- 

Leave a comment