முள்ளிவாய்க்கால் முடிவல்ல …..ஆரம்பம்

36160 0

ஈழ விடுதலைப்போராட்டம் தவண்டு நடை பயின்று மரதன் ஓட்டம் ஓடி முள்ளி வாய்க்காலில் 18-05-2009 அன்று தமீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. நாளை (18-05-2018) ஒன்பது ஆண்டுகள் வலி சுமந்து கடந்து செல்லப்போகின்றது.

இரத்தமும் கண்ணீரும் சிந்தி, உயிர்களை விதைத்து வலிகளை சுமந்த காலங்கள் முடிந்து விட்டனவா? ஒன்பது வருடங்களின் பின்பும் முள்ளிவாய்கால் மண்ணில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியாமல் திண்டாடும்  தமிழீழ உறவுகள்.

உயிர்வலி சுமந்த மக்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மட்டுமல்ல அரசியல்வாதிகளாலும் துன்பப்படுத்தப்படுகிறார்கள் . இவ்வாண்டு நினைவு நாள் நெருங்குகையில் மக்களின் துயரினை ஊடகவியாளர் யசீகரன் தனது கவிவரிகள் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார் . அக் கவிவரிகள்.

புனித ஆன்மாக்களின் புகழுடல்கள்
புதைந்த மண்ணில்
யார் யாரோ வந்து
மலம் கழிக்க துடிக்கிறனர்

அரசியல் பொறுக்கிகளே இது ஒன்றும்
வாக்குப் பொறுக்கும் இடமல்ல
நீங்கள் வந்து வியாபாரம் செய்வதற்கு

அவர்கள் செய்தால் நாம் வரமாட்டேனென்று
ஒரு கூட்டம்
இது எங்களின் நிலம் என்று இன்னொரு கூட்டம்
இறுதிவரை நின்றேன் என்று வாக்குப் பொறுக்க
இன்னொரு கூட்டம்
எல்லோருக்கும் துரோகிகள் பட்டம் கொடுக்க
இன்னொரு கூட்டம்

ஓ வாக்குப் பொறுக்கிகளே
உங்கள் அரசியல் விபச்சாரங்களை
முள்ளிவாய்க்காலுக்கு வெளியே
வைத்துக்கொள்ளுங்கள்

இது இலட்சியக் கனவுகளை
இறுதிவரை சுமந்து சென்ற
புனித ஆன்மாக்கள்
துயில்கொள்ளும் தேசம்

அவர்களை அமைதியாய் உறங்கவிடுங்கள்
இனியாவது ஒருமுறை ஏனும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் வேண்டாம்என மூத்த போராளி பசீர் காக்கா உருக்கமான வேண்டுகோளை விடுத்து சமரச முயற்சிகளில் ஈடுபட்டதன் பயனாக நாளை ஏதோ ஒரு வகை நிம்மதியுடன் ஆத்மாக்களை உணர்வோடு வணங்க முடியும் என நம்புகின்றோம்.

நாளை (18-05-2018) 2009 இறுதி போரில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவு கூர்ந்து நடாத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உணர்வெழுச்சியுடன் இடம் பெறவுள்ளது. முற்பகல் பதின்னொன்று மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடரேற்றப்பட்டு பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

நாளைய தினம் அனைத்து பாடசாலைகளிலும் வட மாகாண சபை கொடியினை அரை கம்பத்தில் பறக்கவிட்டு பதின்னொன்று மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்துமாறு வட மாகாண கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.

அதே வேளை இன்று ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து சமூக ஊடகத்தின் ஊடாக தமிழ் இன அழிப்பை உலகறிகச் செய்கின்றனர்.

#TamilGenocideMay18 – உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோம்.

தமிழ் இன அழிப்பு நாளான மே 18 ஐ நினைகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் twitter மற்றும் Facebook கணக்குகளை ஆக்கிரமிக்கும் இவ் நடவடிக்கையினை (ரெண்டிங்) ஊடகவியலாளர்களும் தமிழ் இளையோரும் இணைந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

#TamilGenocideMay18

என்ற குறியீட்டினை உங்கள் twitter மற்றும் Facebook களில் இன்று (17.05.2018) இரவு 10 மணி முதல் 18.05.2018 இரவு 10 மணிவரை பதிவேற்றி உலகளாவிய ரீதியில் பகிருமாறு அனைத்து தமிழர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.

முள்ளிவாய்கால் முடிவல்ல, ,,, ஆரம்பம் மீண்டும் மரதன் ஓட்டம் தொடரும்……

Leave a comment