சீனாவில் வடகொரிய விமானம் தரை இறங்கியது – கிம் ஜாங் அன் திடீர் சீன பயணமா?

320 0

சீனாவில் வடகொரிய விமானம் தரை இறங்கியது. இதனால் கிம் ஜாங் அன் ‘திடீர்’ சீன பயணம் மேற்கொண்டதாக யூகங்கள் எழுந்து உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் அடுத்த மாதம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சந்திப்பு, சிங்கப்பூரில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பு தொடர்பாக கிம் ஜாங் அன், கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு ரெயிலில் ‘திடீர்’ பயணம் மேற்கொண்டதாக யூகங்கள் எழுந்தன. பின்னர் சீன அதிபர் ஜின்பிங்கை அவர் சந்தித்து பேசியதாக தெரியவந்தது. இது தொடர்பான படங்களும் ஊடகங்களில் வெளியாகின.

இந்த சந்திப்பின்போது ஜின்பிங்கிடம் “ கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை விலக்கி கொள்ள வேண்டும் என்ற பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். தென் கொரியாவும், அமெரிக்காவும் நல்லெண்ணத்துடன் எங்கள் முயற்சிகளுக்கு பதில் அளிக்க வேண்டும். சமாதானமான சூழலை உருவாக்க வேண்டும். ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்” என்று கிம் ஜாங் அன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வடகொரியாவின் விமானம் ஒன்று, சீனாவின் துறைமுக நகரான டாலியனில் தரை இறங்கி உள்ளது. இந்த விமானம், சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது கிம் ஜாங் அன் சகோதரியும், ஆலோசகருமான கிம் யோ ஜாங் பயன்படுத்திய விமானத்தைப் போன்று இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பான காட்சிகளை ஜப்பானின் என்.எச்.கே. டெலிவிஷன் காட்டியது. டாலியனில் பிற விமான போக்குவரத்தும், மற்ற வாகன போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததையும் அந்த காட்சிகள் காட்டின.

எனவே அதிமுக்கியமான வடகொரிய தலைவர் சீனா வந்திருக்க வேண்டும் என்பதையே அந்த காட்சிகள் உணர்த்தின. அந்த தலைவர் கிம் ஜாங் அன்னாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இதுபற்றி சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின. அதற்கு அவை வடகொரியாவின் தலைவர் அங்கு சென்று இருப்பதாக கூறுவதை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் சுவாங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “இந்த தருணத்தில் இதுபற்றி என்னிடம் தகவல்கள் ஏதும் இல்லை. சீனாவும், வடகொரியாவும் நெருங்கிய அண்டை நாடுகள். நாங்கள் வழக்கமான தகவல் தொடர்புகளை கடைப்பிடித்து வருகிறோம். ஒருவருக்கொருவர் பரிமாற்றங்கள் உள்ளன” என்று பதில் அளித்தார்.

கடந்த மார்ச் மாதம் கிம் ஜாங் அன் சீனா சென்றபோதும் முதலில் அவரது ரெயில் பயணம் பற்றிய யூக செய்திகள்தான் வெளியாகி, பின்னர் உறுதி செய்யப்பட்டதுபோல, இப்போதும் கிம் ஜாங் அன் சீனா சென்றிருந்தால் ஓரிரு நாளில் அது உறுதி செய்யப்படலாம். அப்படி அது உறுதி செய்யப்பட்டால் அது முக்கியத்துவம் பெறும்.

டிரம்பை சந்திக்க உள்ள நிலையில், இது தொடர்பான கலந்தாலோசனைக்காகத் தான் தன் நட்பு நாடான சீனாவுக்கு கிம் ஜாங் அன் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a comment