வன்முறையாளர்கள் கற்களை வீசும் போது ஹெட்போன் மாட்டியிருந்ததால் எனது எச்சரிக்கையை எனது மகன் கவனிக்கவில்லை என காஷ்மீரில் கல்வீச்சு தாக்குதலில் பலியான சென்னை வாலிபரின் தந்தை உருக்கமாக கூறியுள்ளார்.
ஆவடியை அடுத்த பாலவேடு முருகன் தெருவை சேர்ந்தவர் ராஜவேல். ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி, மகன் திருமணி செல்வம் (23), மகள் சங்கீதா (27).
ராஜவேல் தனது குடும்பத்தினர், நண்பர்களின் குடும்பத்தினர் 40 பேருடன் கடந்த 4-ந்தேதி டெல்லிக்கு சுற்றுலா சென்றார். பின்னர் காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் பஸ்சில் சென்ற போது நர்பால் பகுதியில் போராட்டக்காரர்கள் -பாதுகாப்புபடையினர் மோதலின் போது வன்முறை வெடித்தது கற்களை வீசினர்.
இதில் பஸ்சில் இருந்த திருமணி செல்வம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
ஆவடியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட திருமணிசெல்வம் உடலுக்கு அமைச்சர் பாண்டியராஜன், கலெக்டர் சுந்தரவல்லி, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ராஜவேல் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
சம்பவம் குறித்து திருமணி செல்வம் தந்தை ராஜவேல் கூறியதாவது:-
எனது குடும்பத்தினர், நண்பர்கள் குடும்பத்தினர் கடந்த 4-ந்தேதியன்று டெல்லிக்கு சுற்றுலா சென்றோம். அதன்பிறகு ஒரு நாள் பயணமாக ஸ்ரீநகருக்கு சென்றோம். நாங்கள் 4 பஸ்சில் நர்பால் பகுதியில் சென்றபோது சிறிது தூரத்திற்கு முன்பு 40 பேர் நின்றிருந்தனர்.

அவர்கள் திடீரென்று நாங்கள் சென்ற 4 பஸ்கள் மீதும் கற்களை வீசினார்கள். திடீரென்று நடந்ததால் மற்றவர்களை எச்சரிக்க சிறிது நேரமே இருந்தது. சிலர் மற்ற பயணிகளை எச்சரிக்கை செய்து அவர்களை தற்காத்து கொண்டனர். நான் எனது மகனுக்கு முன்புறமாக அமர்ந்து இருந்தேன்.
வன்முறையாளர்கள் கற்களை வீசுவது பற்றி நான் மகனுக்கு எச்சரித்த போது அவன் காதில் ‘ஹெட்போன்’ மாட்டியிருந்தான். இதனால் நான் கத்தியது அவனுக்கு கேட்கவில்லை. அதற்குள் ஒரு கல் பஸ் கண்ணாடியை உடைத்துக் கொண்டு அவனது தலையில் பலமாக தாக்கிவிட்டது.
உடனே அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். திடீரென்று வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான். காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி எங்களுக்கு ஆறுதல் கூறினார். எங்களை பாதுகாப்பாக அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 130 பேர் தவிக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அளித்த ரூ.3 லட்சம் நிதிஉதவி திருப்தி அளிக்கவில்லை. இந்த நிதிஉதவி போதாது ரூ. 25 லட்சம் வரை உயர்த்தி தர ஆலோசிக்க வேண்டும். திருமணி செல்வம் உடல் அடக்கம் இன்று மதியம் நடக்கிறது.
காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல போதிய பாதுகாப்பு இல்லை. தாக்குதலின் போது பஸ்சில் இருந்த 45 பேரில் என் மகன், மனைவி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். கல்வீச்சில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

