யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்! பொலிஸாரும் உடந்தை! -சுமந்திரன்

418 0

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறாதவாறு, கிராம மட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்து வாள்வெட்டுக்குழுக்களை மடக்கிப் பிடித்து வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு இளைஞர்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, போதைப் பொருளுடன் பொலிஸாருக்கும் தொடர்புள்ளதென்றும் அதனால் கிராம மட்டக் குழுக்களை அமைத்து அவர்களிடம் போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்கலாம் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

‘வன்முறை தவிர்ப்போம் போதையை ஒழிப்போம்’ எனும் தொனிப்பொருளிலான சமூக மட்ட நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழினத்தை பாதுகாக்க வேண்டுமாயின் போதைப் பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டுமென இதன்போது சுமந்திரன் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் தற்போது நடந்தேறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்செயல்களுக்கு போதைப்பொருளே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள்களுடன் பொலிஸாரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம் எனக் குறிப்பிட்ட சுமந்திரன், எந்த இடத்திலாவது போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகின்றதென்ற தகவல் தெரிந்தால், கிராம மட்ட விழிப்புணர்வு அமைப்புச் சார்ந்தவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு வலியுறுத்தினார். அவர்கள் தம்மை தொடர்புகொள்வார்கள் என்றும், அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுதந்திரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, வாள்வெட்டுக்குழுவினரைக் கண்டால் இளைஞர்கள் ஒன்றிணைந்து வன்முறையை கையாளாமல் அவர்களைப் பிடிக்க வேண்டும் என்றும், குடும்ப வன்முறைகளையும் தட்டிக்கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

வன்முறைகளுக்கு போதையே உடந்தையென தெரிவித்த சுமந்திரன், அதனை முற்றாக ஒழிக்கின்ற சேவையில் உணர்வு பூர்வமாகவும், வீரத்துடனும் இறங்குவோம் என அனைவரையும் சபதம் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அப்படியாயின் அவ் வாள் வெட்டுக் குழுக்களுக்கு பிணை எடுப்பதற்காக நீதிமன்ற வாயில்களில் பல முறை படி ஏறும் சட்டத்தரணிகளைப் பற்றி சுமந்திரன் பா.உ குறிப்பிடாமை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக பொதுவான நிகழ்வுகளில் பிழைகளை பிழை என யாராக இருந்தாலும் சுட்டிக் காட்ட வேண்டும் என மேலும் மக்கள் கூறுகின்றனர்

Leave a comment