கல்விக்கடனுக்காக பாடாய் படுத்திய வங்கி – ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றவருக்கான அனுபவம்

239 0

ஐ.ஏ.எஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது ரேங் எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகரன், கல்லூரி படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை அடைக்க வங்கி அதிகாரிகள் படுத்தி எடுத்ததை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகரன் 101-வது இடத்தை பிடித்தார். 2004-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த இவர் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு சென்றுள்ளார். அந்த வருமானத்தில் தனது உயர்கல்விக்கான செலவுக்கும் சேமித்து, குடும்பத்தையும் அவர் காப்பாற்றியுள்ளார்.
பின்னர், நான்கு வருடங்களுக்கு பின்னர் 2008-ம் ஆண்டு பொறியியல் படிப்பில் பிரபாகரன் சேர்ந்துள்ளார். பேராவூரணியில் உள்ள பொதுத்துறை வங்கியில் இருந்து 79 ஆயிரம் ரூபாய் அவர் கல்விக்கடனாக பெற்றுள்ளார். “நான் படித்து முடிந்து வேலைக்கு சென்றதும் கடனை அடைத்துவிடுவேன் என நான் உறுதியாக கூறிய பின்னரும், அதிகாரிகள் கடனை அடைப்பது குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர்” என பிரபாகரன் கூறியுள்ளார்.
பிரபாகரன்
மேலும், “பட்டப்படிப்பை முடிக்கும் போது எனக்கு சுமார் 2 லட்சம் கடன் இருந்தது. வங்கி அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால் எனது பெற்றோர்கள் பயந்து போயினர். கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை கிடைத்தது. ஆனால், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சேவை செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். கடனை ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு செலுத்தி விடுவதாக வங்கி அதிகாரிகளிடம் கூறினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வுக்கு டெல்லி செல்வதற்காக தனது நண்பர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால், கல்விக்கடனுக்காக அதனை வங்கி பிடித்தம் செய்துள்ளது. இதன் பின்னர், மற்ற தேர்வர்கள் உதவியுடன் அவர் நேர்முக தேர்வை முடித்து விட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.
“வங்கி கடனை அடைக்க கூடுதல் அவகாசம் வழங்க கோரி அதிகாரிகளிடம் முறையிட செல்வேன். ஆனால், என்னை வாட்ச்மேன் உள்ளே அனுமதிக்க மாட்டார்” என வேதனையுடன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Leave a comment