முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்த அனைவரும் ஒத்துழைப்போம்!

358 0

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 09ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ளது.
இன அழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைக்காக நடாத்தப்பட்ட ஆயத்மேந்திய போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 என்பது தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும். அந்நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனவழிப்பு தினமாகும்.

இந்நாளை ஓரிடத்தில் நினைவு கூருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்துத் தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்மைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் நினைவேந்தலின் முக்கியத்துவம் என்பது நினைவு கூரல் என்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும் அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைக்கான குரல் ஒருமுகப்படுத்தி வலுப்படுத்தப்படல் வேண்டும் என்பதாகும்.

மேற்படி நினைவேந்தலை ஓரிடத்தில் ஒற்றுமையாக நடாத்த ஒத்துழைக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 30.04.2018ஆம் திகதி வெளியிட்டுள்ள தமது அறிக்கையில் “ஒற்றுமை என்ற பெயரில் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீத்துப்போகச் செய்யும் நோக்கமோ தமிழ் மக்களுக்கான நீதி வேண்டிய பயணத்தில் முட்டுக்கட்டைகளாக இருப்போரை அரவணைக்கும் நோக்கமோ” இல்லை என்பதனை உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் அவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை தமிழ் மக்களுக்குள்ளது. எனவே முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புரிமையுடன் வேண்டிக் கொள்வதுடன், நேரில் செல்ல முடியாதவர்கள் இனவழிப்பு யுத்தத்தில் இறந்த எம் உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்குமாறும் வேண்டுகின்றோம்.

நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தொடர்புகளுக்கு: 0773024316

Leave a comment