ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4-ந் தேதி தமிழகம் வருகிறார்

312 0

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 4-ந் தேதி தமிழகம் வருகிறார். 

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ராம்நாத் கோவிந்த் கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் வந்தார். இந்த நிலையில் அவர் 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4-ந் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். அதன்படி டெல்லியில் இருந்து வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.05 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.45 மணிக்கு வந்தடைகிறார்.

அங்கு இருந்து காலை 11 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு வேலூர் ஸ்ரீபுரம் தங்ககோவில் ஹெலிபேட் தளத்துக்கு காலை 11.45 மணிக்கு சென்றடைகிறார். பின்னர் சாலைமார்க்கமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு மதியம் 12.20 மணிக்கு வந்தடைகிறார்.

அந்த கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சாலைமார்க்கமாக வேலூர் சர்க்யூட் இல்லத்துக்கு மதியம் 1.40 மணிக்கு சென்று, மதிய உணவு அருந்துகிறார்.

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மதியம் 3 மணிக்கு வருகிறார். அங்கு சிறுநீரக மாற்று மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவுகளை தொடங்கிவைக்கிறார். பின்னர் ஸ்ரீபுரம் தங்ககோவில் விருந்தினர் மாளிகையில் மதியம் 3.35 மணி முதல் 3.55 மணி வரை தங்குகிறார். அதன்பின்னர் வேலூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்க கோவிலை மாலை 4 மணி முதல் 4.40 மணி வரை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்கிறார்.

மாலை 4.55 மணிக்கு ஸ்ரீபுரம் தங்ககோவில் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு மாலை 5.40 மணிக்கு வருகிறார்.

அங்கிருந்து சாலைமார்க்கமாக கிண்டி கவர்னர் மாளிகைக்கு மாலை 6.05 மணிக்கு செல்கிறார். அங்கு இரவு 7.30 மணி வரை ஓய்வு எடுக்கிறார். பின்னர் 8 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

மே 5-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10 மணி வரை கிண்டி கவர்னர் மாளிகையில் மீண்டும் முக்கிய பிரமுகர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.10 மணிக்கு சாலைமார்க்கமாக புறப்பட்டு சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு வருகிறார்.

அங்கு 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

பின்னர் அங்கிருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரிக்கு சாலைமார்க்கமாக மதியம் 11.55 மணிக்கு போய் சேருகிறார். அங்கு மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, குரு அமர் தாஸ் மற்றும் சாகித் பாபா தீப் சிங் கட்டிட அரங்குகளை திறந்து வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து மதியம் 1.15 மணியளவில் சென்னை விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து மதியம் 1.25 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மற்றும் வேலூர் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

Leave a comment