தமிழக கவர்னர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும்- முத்தரசன்

263 0

பேராசிரியை ஆடியோ விவகாரத்தில் கவர்னர் பெயர் சம்பந்தப்பட்டு உள்ளதால் அவரே தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் சமூக வலை தளத்தில் பரவிய ஆடியோ தொடர்பான சர்ச்சை குறித்து தமிழக ஆளுனர் அவசரமாக விசாரணை கமி‌ஷன் அமைத்தது ஏற்கக்கூடியது அல்ல.

இந்த விவகாரத்தில் உதவி பேராசிரியர் ஒரு அம்புதான். ஆனால் அவர் யாருக்காக இவ்வாறு செயல்பட்டார் என்பதை விசாரணையின் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுனர் பெயரும் சம்பந்தப்பட்டு உள்ளதால் அந்த பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆளுனர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குடியரசு தலைவர், தமிழக ஆளுனரை திரும்ப பெற வேண்டும்.

இந்த விவகாரத்தை திசை திருப்பி தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டுமென்று கருத்துக்களை தெரிவித்த எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும். அந்த கட்சியின் தலைமையும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எச்.ராஜாவின் செயல்பாடுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல், புகார் கொடுத்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது பொறுப்பற்ற பதில். தமிழக அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வர வேண்டும். காவிரி பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்துள்ள கட்சிகளெல்லாம் தேர்தல் கூட்டணியாக மாற வேண்டுமென்பது என் விருப்பம். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment