கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்

231 0

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவில்பட்டி நே‌ஷ‌னல் பொறியியல் கல்லூரியில் நடந்து வரும் நீட் தேர்வுக்கான உண்டு உறைவிட முகாமை தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவியரிடம் பயிற்சி வகுப்புகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் குமார் யாதவ், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம் மற்றும் பலர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 9 கல்லூரிகளில் 3118 மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கோவில்பட்டி நே‌ஷ‌னல் பொறியியல் கல்லூரியில் ஆங்கில வழி பயிற்சி அளிக்கப்படுகிறது. சைதான்யா நிறுவனம் சிறந்த பயிற்சி அளித்து வருகிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் நீட் தேர்வை சந்திக்க முடியும். எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் மத்திய அரசின் எந்த ஒரு போட்டி தேர்வையும் துணிவோடு எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தி வருகிறோம்.

தமிழக ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான இடமாறுதலில் குளறுபடிகள் இல்லை. அப்படி குளறுபடிகள் இருந்தால், உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரலாம். தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும். இது மாணவர் சேர்க்கையின்போது கண்காணிக்கப்படும். தமிழக பள்ளிகளில் மே 2-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அப்போது அரசு பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை தெரியவரும். பள்ளிகளில் தேவையான அளவு சிறந்த ஆசிரியர்களே பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், “412 மையங்களிலும் வரும் காலங்களில் நீட் தேர்வுக்காக பிளஸ்-1 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்தாண்டு 8223 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முன் வந்தனர். அவர்களில் மதிப்பெண் அடிப்படையில் 3118 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் சிறிய தவறு கூட நடைபெறாமல் அரசு பார்த்து கொள்ளும்” என்றார்.

Leave a comment