கனடாவில் காணாமல் போன மகன் – வெளியே கூற முடியாமல் இருந்த தாய்!

345 0

கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமது பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை காலமும் தகவல்களை வெளியிடாமல் இருந்தமைக்கான காரணத்தை யாழ்ப்பாணத்திலுள்ள உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

சன்சீ கப்பல் மூலம் கனடாவுக்கு சென்ற 37 வயதான கிருஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அவர் கடந்த சில வருடங்களாக காணாமல் போயிருந்தார். எனினும் அதுகுறித்து தெரியவராத நிலையிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட யாழ். இளைஞனின் குடும்பத்தினர் இதுவரை அவர் காணாமல் போனதை தெரியப்படுத்தாமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர். கனேடிய அரசாங்கம் அவரது அகதி விண்ணப்பத்தை நிராகரித்த பின்னர் அவர் மறைந்திருப்பதாக நினைத்ததால் அவரை காணவில்லை என முறைப்பாடு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் கனகரட்னம் 2010ஆம் ஆண்டு MV சன்சீ கப்பல் மூலம் 492 இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் கனடாவுக்கு சென்றுள்ளார். கனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக் ஆர்த்தரினால் கிருஷ்ண குமார் கனகரட்னம் கொலை செய்யப்பட்ட விடயம் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனகரட்ணத்தின் தாயார் மற்றும் மைத்துனர் கனடா ஊடகமொன்றுக்கு கண்ணீருடன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மகன் உயிரிழந்த விடயம் தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்து கொண்டோம் என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக அவருக்காக நாம் காத்திருந்தோம் என கனகரட்ணத்தின் மைத்துனர் சுதாகரன் தணிகாசலம் தெரிவித்துள்ளார். “அவருக்கு என்ன நடந்ததென நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் அவர் கொலை செய்யப்பட்டார்? எப்போது அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பான தகவல்கள் எங்களுக்கு வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில் வசிக்கும் மகன் கனகரட்ணத்திற்காக காத்திருப்பதாக குடும்பத்தினர் கடந்த டிசம்பர் மாதம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவினை தாம் பார்த்ததாக பொலிஸார் உறுதி செய்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியாக அவர் டொரொன்டோவில் இருந்து பேசினார் என தாயார் குறிப்பிட்டுள்ளார். தினமும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் கனகரட்ணம், அழைப்பேற்படுத்துவதனை நிறுத்திய பின்னர் அவரது தொலைபேசி இயங்காமல் போனதாக தாயார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நாம் மிகவும் வருத்தம் அடைந்தோம். தெரிந்த அனைவர் ஊடாகவும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எனினும் முடியவில்லை. என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியாமல் போனது.. என மைத்துனர் குறிப்பிட்டுள்ளார். கனகரட்ணம் உயிரிழந்ததனை உறுதி செய்த பொலிஸார், அவர் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர். அவர் கொலையாளியின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனகரட்ணம் காணாமல் போனமை தொடர்பில் தமது குடும்பம் முறையிட முயற்சிக்கவில்லை. கனடா அரசாங்கத்திடம் சிக்கி மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார் என எண்ணினோம் அதனாலேயே முறைப்பாடு செய்யவில்லை என மைத்துனர் குறிப்பிட்டுள்ளார். கனகரட்ணத்தின் சகோதரனும் இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதனாலேயே அவர் கனடாவுக்கு சென்றுள்ளார். தன் தாயை பாதுகாக்கும் பொறுப்பை எடுத்து கொண்டே கனடா சென்றுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு பிள்ளைகளில் கனகரட்ணம் நான்காவது பிள்ளையாவார். அவரது மூத்த சகோதரன் 2007ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். “தனக்கு கனடாவில் நண்பர்கள் இருப்பதாக மகன் ஒரு போதும் என்னிடம் கூறியதில்லை. கொலையாளியுடன் எப்படி அவர் அறிமுகமானார் என்று எனக்கு தெரியவில்லை. மகனுக்கு எவ்விதமான கெட்ட பழக்கங்களும் இல்லை. கனடாவில் சேகரிக்கும் பணத்தை எனக்கு அனுப்புவர். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது தொழிலை இழந்தார். அதன் பின்னர் நகரும் நாற்காலி தயாரிக்கும் பணியில் அவர் இணைந்தார்” என தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கனகரட்ணம் தொடர்பில் தகவல் கிடைத்ததில் இருந்து குடும்பம் மிகவும் வேதனையில் உள்ளதாகவும், அவரது தாயாருக்கு சிறிய தெருக்கடை ஒன்று மாத்திரமே உள்ளதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக அதன் ஊடாகவே வாழ்வதாகவும் மைத்துனர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment