வடபழனி கொலையில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்ற கோவில் குருக்கள் கைது

368 0

பிரசித்தி பெற்ற வடபழனி சிவன் கோவில் குருக்களே நகைக்காக மனைவியை கொலை செய்து இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த கோவில் குருக்கள் பாலகணேசின் மனைவி ஞானப்பிரியா கடந்த 4-ந்தேதி நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. பின்னந்தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். கணவர் பாலகணேஷ் வீட்டுக்கு வெளியில் கழிவறை அருகே காயத்துடன் மீட்கப்பட்டார். அவரது கை, கால்களும் கட்டப்பட்டு இருந்தன.

கொள்ளையர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து பாலகணேசை கட்டிப் போட்டு விட்டு ஞானப்பிரியாவை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த கொலை குறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகள் யார் என்பதை உடனடியாக கண்டு பிடிக்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரது மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

வடபழனி உதவி கமி‌ஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, பசுபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் கடந்த 5 நாட்களாக தீவிரமாக விசாரணை நடத்தினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவர் பாலகணேசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நள்ளிரவில் வீட்டுக்கு வந்த 2 பேர் உருட்டு கட்டையால் என்னை தாக்கி கட்டி போட்டு விட்டு மனைவியை கொலை செய்து விட்டு தப்பியதாக முதலில் வாக்குமூலம் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அது போன்று எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போட்டு பார்த்ததில் பால கணேஷ் கூறியது பொய் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து பாலகணேசிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக அவர் பேசினார். இதனால் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. ஞானப்பிரியாவை பாலகணேஷ்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதி அதிரடி விசாரணையை தொடங்கினர்.

இதன் பயனாக நேற்று இரவு ஞானப்பிரியா கொலை வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. கோவில் குருக்களான பாலகணேசே மனைவியை கொலை செய்து விட்டு நாடகம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பாலகணேஷ், அவரது நண்பர் மனோஜ் என்ற தனசேகரை துணைக்கு அழைத்துக்கொண்டு மனைவியை கொலை செய்திருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியானது.

திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் ஞானப்பிரியா தவித்து வந்துள்ளார். இதனை காரணம் காட்டி அடிக்கடி கணவர் பாலகணேசுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஞானப்பிரியாவை பால கணேஷ் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பால கணேஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எங்களது திருமணம் பெற்றோர்களால் செய்து வைக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் நானும், ஞானப்பிரியாவும் தனிக்குடித்தனம் சென்றோம். ஆனால் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்கு நான்தான் காரணம் என்று கூறி ஞானப்பிரியா என்னை அடிக்கடி அவதூறாக பேசி வந்தார்.

இதனால் கடுமையான மன உளைச்சலில் தவித்து வந்தேன். நாங்கள் சண்டை போடுவது வெளியில் தெரியாது. வீட்டுக்குள் வைத்தே என்னை அசிங்கமாக திட்டுவார். இதனை நான் பொறுத்து கொண்டே சென்றேன்.

கடந்த 4-ந்தேதி அன்றும் குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி என்னிடம் தகராறு செய்தார். இதனால் மனைவி என்றும் பாராமல் தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன்.

இதற்காக போரூரைச் சேர்ந்த நண்பர் மனோஜ் உதவியை நாடினேன். அவரை வீட்டுக்கு வரச்சொல்லி என்னை கட்டிப்போட்டு விட்டு சென்று விடுமாறு கூறினேன். அதன்படி அவர் வீட்டுக்கு வந்தார். அதற்குள் நான் ஞானப்பிரியாவை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து விட்டேன்.

பின்னர் மனோஜ் எனது கை, கால்களை கட்டி போட்டார். அப்போது நானே சுவரில் மோதி காயத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

பின்னர் வீட்டுக்கு வெளியில் கழிவறை அருகே மயங்கியதுபோல் நாடகம் ஆடி படுத்துக் கொண்டேன்.

இவ்வாறு பாலகணேஷ் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மனைவியை கொன்ற பாலகணேஷ் தனது வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை எடுத்து பாதியை நண்பர் மனோஜிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நகைக்காக ஞானப்பிரியா கொலை செய்யப்பட்டதாக போலீசாரை நம்ப வைத்து விடலாம் என்று கருதி சொந்த வீட்டிலேயே கொள்ளை சம்பவத்தை அவர் அரங்கேற்றி உள்ளார்.

கைதான பாலகணேஷ், மனோஜ் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

பிரசித்தி பெற்ற வடபழனி சிவன் கோவிலில் குருக்களாக இருந்த பாலகணேஷ் மனைவியை கொலை செய்து இருப்பதை அறிந்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் கோவில் குருக்கள் பால கணேஷ் நன்கு அறிமுகம் ஆனவர். அவர்களும் கோவில் குருக்களா இப்படி? என்று அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

Leave a comment