ஐஸ்வர்யா ராயை மணக்கிறார் லாலுவின் மகன் தேஜ் பிரதாப்

15427 0

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 18-ம் தேதி பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டலிலும், திருமணம் மே 12-ம் தேதி பாட்னாவிலும் நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் யாதவ் சமூகத்தில் இருந்து வந்த முதலாவது முதலமைச்சர் தராகோ ராய் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பேத்தியும், முன்னாள் அமைச்சர் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயைத்தான் தேஜ் பிரதாப் திருமணம் செய்ய இருக்கிறார்.

 

இந்த திருமணம் குறித்து பிஹார் எதிர்க்கட்சித் தலைவரும், லாலுவின் இளைய மகனான தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’ இந்த திருமணத்துக்கான முறைப்படியான அறிவிப்பை இரு வீட்டாரும் வெளியாடுவார்கள். திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டவுடன் அனைவருக்கும் முறைப்படி அறிவிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

அதேசமயம், திருமணம் நடைபெறும் நேரத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பது லாலுவின் குடும்பத்தினரையும், அவரின் ஆதரவாளர்களையும் ஆழ்ந்த வேதனையில் தள்ளி இருக்கிறது.

இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், ‘திருமணத்துக்கு முன்பாக லாலு பிரசாத் யாதவை ஜாமீனில் எடுக்க முயற்சிப்போம். ஒருவேளை ஜாமீன் கிடைக்காவிட்டால், பரோலில் வெளியே கொண்டு வருவோம். எங்களின் தலைவர் சிறையில் இருக்கும் போது, இந்த திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தவே அனைவரும் விரும்புகிறார்கள். கடந்த 6 மாதமாக இரு குடும்பத்தாருக்கும் இடையே இந்த திருமணம் குறித்து பேசி, இப்போது முடிவு செய்துள்ளனர். வரும் 18-ம் தேதி பாட்னாவில் ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தமும், மே 12-ம் தேதி திருமணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

தேஜ் பிரதாப் யாதவ் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஐஸ்வர்யா ராயின் உண்மையான பெயர் ஜிப்ஸி.(இந்த வார்த்தைக்கு பிஹாரில் சிறிய மழை தூறல் என்று அர்த்தம்)

ஐஸ்வர்யா ராயின் தந்தை சந்திரிகா ராய் முன்னாள் அமைச்சர். ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு சகோதரி, ஒரு சகோதரர் உள்ளனர். பாட்னாவில் உள்ள நோட்ரி டேம் அகாடெமியில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா ராய் டெல்லியில் எம்.பி.ஏ பயின்றார்.

லாலு மகன் தேஜ்பிரதா யாதவ் தனது திருமணத்தில் 3 கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். வரதட்சணை பெற மாட்டேன், திருமணத்துக்கு உடல் உறுப்புகள் தானத்தில் கையொப்பமிடுவேன், எந்தவிதமான சாதி மறுப்பு திருமணத்துக்கும் எதிராக நிற்கமாட்டேன் என்பதாகும்.

Leave a comment