வைகைச்செல்வனுக்கு சொல்லின் செல்வர் விருது- முதல்வர் பழனிசாமி நாளை வழங்குகிறார்!

466 0

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்.

தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்தவர்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டு தோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2016- 2017-ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியத்துக்கு கபிலர் விருது, கிருஷ்ணமூர்த்திக்கு உ.வே.சா. விருது, சுகி.சிவத்துக்கு கம்பர் விருது, கோ. ராஜேஸ்வரிக்கு ஜி.யு.போப் விருது, காஜி முகமது யூசுப்புக்கு உமறுபுலவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விருதுகளை வழங்க உள்ளனர்.

சொல்லின் செல்வர் விருது பெரும் வைகைச்செல்வன் 1989-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக இருந்து வருகிறார். தற்போது அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளராகவும், கொள்கை பரப்பு துணை செயலாளராகவும் உள்ளார்.

இவர் 2010-ம் ஆண்டு “இணைய இதழ்கள் ஒரு ஆய்வு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 7 கவிதை தொகுப்புகள், 4 புதினங்கள், 2 கட்டுரை தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

சிறந்த பேச்சாளரான இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வருகிறார். தமிழ் இலக்கியம் மீது ஆழ்ந்த பற்று கொண்ட இவர் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தனது ஒரு வருட எம்.எல்.ஏ., ஓய்வூதியமான ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment