போராளி மலைமகள் எழுதிய கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு!

20 0

போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்போனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்…

முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது.

அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினரின் அமுக்க வெடிகளைப் பாய்ந்து கடந்து, சண்டை வந்தால் சண்டை பிடித்து, விழுப்புண்ணடைந்தோரைச் சுமந்து, வித்துடலாக வீழ்ந்தோரைச் சுமந்து, பெருந்தொலைவுவரை நடந்துதான் போர்க்களத்தைவிட்டு வெளியேற முடியும்.

அப்போது முழங்காவிலில் இருந்த 2ஆம் லெப்.மாலதி படையணியின் மக்கள் தொடர்பகத்துக்கு வரப்போகும் பெற்றோரைக் காண வர ஒருநாள், சந்திக்க ஒரு நாள், மறுபடியும் போய்ச்சேர ஒரு நாள் என மூன்று முழு நாட்கள் பிடிக்கும். மூன்று நாட்களும் இரு போராளிகளின் பணியை முடியரசி வெற்றிடமாக விடமுடியாது. எனவே மாற்றிவிட ஆட்கள் வந்தனர்.

முறியடிப்பு அணியிலிருந்து வினோதா, திசையருவி, அகிலானி மூவரும் வந்தனர். இவர்கள் வந்தபின் அவர்கள் போயினர். பெற்றோரைக் கண்டனர். இதோ இன்று அவர்கள் திரும்பி வருகின்றனர். முடியரசியின் அணியிலிருந்தும் வேறு அணிகளிலிருந்தும் பெற்றோரைக் காணச் சென்றவர்கள் ஒரு அணியாக, தேடுதல் செய்தபடி கொம்பனிப் பொறுப்பாளர் புகழரசியின் கட்டளை மையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் தகவல் பகுதிக் கட்டளை அதிகாரி செங்கோல் அவர்களால் புகழரசிக்குச் சொல்லப்பட்டது. அந்த அணியின் கண்ணெட்டும் தொலைவில் புகழரசியின் கட்டளை மையம் தெரிந்த வேளை சிங்களப் படையினரின் தாக்குதலை அந்த அணி சந்தித்தது. போர் முன்னரங்கின் பின்புறம், கட்டளை மையத்தின் பின்புறம் சண்டை தொடங்கியது.

முன்னணி அவதானிப்பு நிலையின் முன்புறம் ஒரு குவியலாகச் சிங்களப் படையினர் வருவதை அதில் நின்றவர்கள் கண்டனர். சண்டையைத் தொடங்கினர். வினோதாவுக்கு இதுவே முதற்சண்டை.(இச் சண்டையின் முழுமையான விரிப்பு 2008.07.25 அன்றைய ‘உள்ளிருந்து ஒரு குரல்’ இல் உள்ளது.)பின்புறமும் முன்புறமும் சுற்றிவளைத்து சிங்களப் படையினர் செய்த முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் புகழரசியின் வழிநடத்தலில் அணியின் முன்னணியில் திசைகாட்டியுடன் நகர்ந்த முடியரசியும் கூடச் சென்ற ஆண் போராளி பாசறையும் சிங்களப் படையினருடனான மோதலில் வீரச்சாவடைய, இப்போது அணியின் முன்னணியில் திசைகாட்டியோடு வினோதா.

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை ஒருபோதும் நேரடியாகக் கண்டிராத வினோதாவை, அவரைப் பற்றிய பாடல் ஒன்று வழிநடத்தியது .

“அண்ணன் சொன்ன வேதம்
என்ன சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
முயன்றிடு பாதைகள் எப்போதும்
திறக்கும் இல்லையேல்
அவைகள் மூடியே கிடக்கும் என்றார்
இன்னும் அதிகமுண்டு.
தூரமென்று ஏதுமில்லை
பாரம் என்ற சொல்லே இல்லை
ஏலாதென்றால் சேரும் தொல்லை
போராடென்றான் போராடென்றான்”
(நன்றி – பாடல் தமிழவள்)

வினோதாவை வழிநடத்திய பாடல் எல்லோரையும் வழிநடத்தட்டும்.
கோயில் மோட்டையில் போர் முன்னரங்கை இளங்கிளையின் கொம்பனி அமைத்து நின்ற காலம் இது. செவிப் புலனுக்கும் எட்டாத இடைவெளிகளோடு, இயற்கை மறைப்புகளைப் பயன்படுத்தி, குளிப்பு, முழுக்கை அறவே மறந்து, உடன் சமைத்த உணவு பற்றிய சிந்தனை இன்றி இளங்கிளையின் கொம்பனி காவல் நின்றது.

முன்னே பெயர் சூட்டப்பட்ட சிங்களப் படைப்பிரிவுகள், பின்னே பெயர் சூடாத அமுக்கவெடி தாங்கிய சிங்களப் படையினர் என்று எந்நேரமும் தீ மூளக்கூடிய சமர்க்களம் அது. சிறிலங்காவின் வரை படத்தில் கோயில்மோட்டை என்று குறிப்பிடப்படும் அவ்வூருக்குத் தமிழீழப் போர் வீரர்கள் சூட்டிய செல்லப் பெயர் கிளைமோர் மோட்டை.

அந்தக் கோயில்மோட்டையில் முறியடிப்பு அணியாகக் கீதவாணியோடு வினோதா, செவ்விழி முதலானோர் நின்றனர். அன்று சுடரிசையின் பிளாட்டூனிலிருந்து இருவர் தமது பெற்றோரைக் காண்பதற்காக முழங்காவிலை நோக்கிய இடர் மிகு பயணத்தைத் தொடங்க இருந்தனர். போக வேண்டிய இருவரும் பிளாட்டூன் முதல்விக்கான காப்பரணில் நிற்பவர்கள். இவர்களை மாற்றிவிட வினோதாவும் செவ்விழியும் வந்தனர்.

வந்திறங்கியவர்களிடம் போகவேண்டியவர்கள் ஒரு தகவலைச் சொன்னார்கள். அன்று காலை அவர்களின் காப்பரணின் முன்புறம் அமுக்க வெடி ஒன்று கைப்பற்றப்பட்டதால், விழிப்போடு இருக்கும்படி எச்சரித்தனர். வந்தவுடனேயே வினோதா காவற்கடமையைப் பொறுப்பேற்றார். செவ்விழி வேறு சிலருடன் தண்ணீர் அள்ளிவரப் போய்விட்டார். வலம், இடம் உள்ள காப்பரண்களைப் பார்வையிடவோ, காப்பரண் முதல்விகளுடன் அறிமுகம் செய்துகொள்ளவோ நேரமிருக்கவில்லை.

நின்று அவதானிக்கமுடியாத அடர்காடு அது நிலத்தில் இருந்தால் அடி மரங்களிடையே ஓரளவு கவனிக்கலாம். திறந்த அகழியைக் கொண்ட காவலரணின் முன்புறமாக சில மீற்றர்கள் முன்னே மரமறைவில் அமர்ந்து காவல் செய்த வினோதாவை சில சத்தங்கள் ஈர்த்தன. யார் யாரோ நடக்கும் ஓசை, சருகுகள் மிதிபடும் ஒலி, மொழி பிரித்தறிய முடியா ஆண் குரல்கள் எல்லாவற்றையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.தண்ணீர் அள்ளப் போனபோதும், திரும்பி வரும்போதும் தன்னோடு வந்த மூவரையும் மிக நீண்ட இடைவெளி விட்டே செவ்விழி கூட்டி வந்தார். முறியடிப்புப் பயிற்சி பெற்றவரல்லவா முன்னெச்சரிக்கையோடு செயற்பட்டார். திரும்பி வந்து சேர்ந்துவிட்டார்.

செவ்விழி வந்தவுடன் வினோதா புறப்பட வேண்டியிருந்தது. கண்ணிகளை விதைத்துவிட்டு நின்ற லெப்.கேணல் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் நால்வரையும் பின்னரங்குக்குக் கூட்டிப் போய் விட வேண்டும். அந்த நால்வர், வினோதா, அணிமுதல்வி ஒருவர், போராளி ஒருவர் என ஏழு பேரும் செவ்விழி போய்வந்த பாதை வழியே புறப்பட்டனர்.

தலைக்கு மேலே சிங்களப் படையினர் ஏவிய எறிகணைகள் கூவியபடி கடந்தன. குறிப்பிட்டளவு இடைவெளி விட்டு நகர்ந்த அணியின் நான்காவதாக வினோதா, பின்னால் அணிமுதல்வி, பின்னால் ஏனையோர் போய்க்கொண்டிருக்க திடீரென ஏறத்தாழ ஐம்பது (50) மீற்றர்கள் முன்னால் ஒரு வெடிப்பொலி எழ, தொடர்ந்து புழுதி, கிளைகள், இலைகள் எல்லாம் சேர்ந்து எழுந்தன.

ஒரு எறிகணை விழுந்து வெடிப்பதாக உணர்ந்து கொண்ட வினோதா மரமொன்றோடு காப்பெடுத்தார். கண நேர இடைவெளியில் ஏறத்தாழ இருபத்தைந்து (25) மீற்றர்கள் முன்னால் மீண்டும் வெடிப்பொலி, புழுதி, கிளைகள், இலைகள் எழ, பரணி வித்துடலாக வீழ்வது தெரிந்தது. புழுதி சற்று அடங்கியபோது முன்னாலும் எவரையும் காணோம். பின்னாலும் காணோம். வினோதா தனித்து நின்றார். வெடிப்பொலி எழுந்த திசையில் ஆண்கள் சிலரின் நடமாட்டத்தைக் கண்டார். நம்மவர்கள் என்ற நினைவில் சில அடிகள் முன்னே வைக்கவும் இவரை நோக்கிப் பீ.கே.எல்.எம்.ஜி சுடுகலனால் அவர்கள் சுடத் தொடங்கினர்.வெடிப்பொலிகளுக்கான மூலம் அமுக்க வெடிகள் என்பதும், முன்னே நிற்பது யார் என்பதும் இப்போது வினோதாவுக்கு விளங்கியது. ஏனையவர் களுக்கு இவ்விடயம் நேர காலத்துக்கே விளங்கியதால், அவர்கள் பறந்துவிட்டனர் என்பதும் விளங்கியது.

நான்காம் இலக்கப் பாதணியை அணிகின்ற, நான்கரை அடிகள் உயரம் கொண்ட வினோதாவின் ஒல்லியான உருவைக் கண்ட சிங்களப் படையினர் அவரைக் கடுகென எண்ணி, வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்குத் தன் காரத்தைக் காட்டிய வினோதா, படையினரைச் சுட்டபடியே தான் நின்ற காப்பரணுக்கு வந்து சேர்ந்தார்.

வினோதாவின் வரவுக்காகக் காத்திருந்த சுடரிசை அமுக்க வெடித் தாக்குதல் நடந்த இடத்தைத் தேடுதல் செய்ய இவரோடு மருதஎழிலையும் ஒரு ஆண் போராளியையும் அனுப்பினார். தேடுதலின் போதான நேரடி மோதலில் மருதஎழில் விழுப்புண்ணேற்றார். அவரின் சுடுகலனை ஆண் போராளி எடுத்துக்கொள்ள, மருதஎழிலைக் காவும் பணி வினோதாவுக்கே. குருவி தலையில் பனங்காய்.உருவில் தன்னில் பெரியவரான மருதஎழிலைக் காவுவதும், சிங்களப் படையினரைச் சுடுவதும், காவுவதும் சுடுவதுமாக அவரைக் காப்பரணுக்குக் கொண்டு சேர்த்தார் வினோதா.

இப்போது மாலையாகிவிட்டது. நாடு இருளமுன்னரே இருண்டு விடுகின்ற காட்டினுள்ளே தொடங்கியது வினோதாவின் அடுத்த பணி. உடனடியாகத் தயார்ப்படுத்தப்பட்ட காவுபடுக்கையில் மருதஎழிலை ஏற்றி மூன்று ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமாகச் சுமந்து பின்னே வர, கப்டன் அறிவுமலர் வானொலிக் கருவியூடாக போய்ச் சேரவேண்டிய இடத்தில் உள்ளோருடனும் வழியனுப்பிய இடத்தில் உள்ளோருடனும் தொடர்பைப் பேணியபடி வர, ஒரு திசைகாட்டியின் உதவியுடன் அணியை வழி நடத்தியபடி முன்னே போய்க்கொண்டிருந்தார் வினோதா.

மாலை 5.30 மணியளவில் தொடங்கிய அவர்களின் நீண்ட பயணம், தொலைதூர இலக்கை அடைந்தபோது விடிகாலை 3.30 மணியாகிவிட்டிருந்தது. பெற்றோரைக் காணச் சென்ற இருவரும் தம் காப்பரணுக்குத் திரும்பியதும், செவ்விழியும் வினோதாவும் மீளவும் தமதணிக்கு சென்றனர். அவர்களுக்காக அங்கே பல பணிகள் காத்திருக்கின்றன.

போராளி மலைமகள்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related Post

அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம் – வர்மா

Posted by - January 20, 2017 0
இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த  காளைக்கும் கோமாதாவுக்கும் உரிய  நாளாக தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

இன்று உலக காசநோய் தினம்!

Posted by - March 24, 2017 0
இன்று (24-ந்திகதி) உலக காசநோய் தினமாக அனுஷ்க்கப்படுகிறது. காசநோய் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கைக்கு என்ன நடக்கப்போகின்றது?

Posted by - January 26, 2017 0
திருமதி மனோரி முத்வெட்டுகம தலைமயில் உருவாக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையை கடந்த 3 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது

மூன்று காரணங்களும் மூக்குடைவும்!

Posted by - November 18, 2018 0
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை வெளியிட்டு, இரண்டு நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதற்கான காரணங்களை விளக்கி, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அகிம்சைபேசும் போலிமனிதர்களை நம்பி திலீபனை பலிகொடுத்தது ஈழத்தமிழினம்

Posted by - September 26, 2016 0
இந்த உலகத்தில் எத்தனையோ தியாகிகள் தோன்றியிருக்கலாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோரிக்கைகளுக்காக எதை எதை எல்லாமோ தியாகம் செய்திருக்கலாம் ஆனால் தனது சமூகத்திற்காக தனது இனத்தின் விடிவுக்காக உயிரையே…

Leave a comment

Your email address will not be published.