ஒரு பெண் போராளியின் கதை!

3238 0

காயத்திரி தனது வாழ்வு தொடர்பாக அதிருப்தியடைந்திருந்தார். இவர் தன்னைத் தானே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்வதற்காக இணையத்தளத்தில் ‘உன்னத தலைவர்களால்’ ஆற்றப்பட்ட உரைகளைப் பார்ப்பதெனத் தீர்மானித்தார்.

ஆனால் இணையத்தளமும் செயற்படவில்லை. இது இவருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்டு தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுதந்திர தமிழீழத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டது.

இந்த யுத்தமானது தமிழீழ விடுதலைப் புலிகள் 2009ல் சிறிலங்கா இராணுவத்தினரால் தோற்கடிக்கப்படும் வரை தொடர்ந்தது. இந்த யுத்தத்தில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் காவுகொள்ளப்பட்டனர். பிரபாகரனும் அவரது போராளிகளும் சுதந்திர நாட்டைப் பெற்றுக் கொள்ளவில்லை.

பருத்தித்துறையிலுள்ள ஒரு சிறிய கரையோரக் கிராமம் ஒன்றில் பனைமரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த காயத்திரி, தலைமுடி குறுகியதாக வெட்டப்பட்டு புலிகள் அமைப்பின் சீருடை அணிந்தவாறு இருந்த தனது பழைய ஒளிப்படம் ஒன்றை தனது செல்பேசியில் காண்பித்தார்.

இன்று காயத்திரியின் தோற்றம் மிகவும் மாறிவிட்டது. அதாவது அவரது நகங்களில் பூச்சுப்பூசப்பட்டுள்ளதுடன், நீண்ட தலைமுடியும் வளர்ந்து காயத்திரி முற்றிலும் வெளித்தோற்றத்தில் மாறியிருந்தார்.

ஆனாலும் இவர் யுத்த களத்தில் போரில் ஈடுபட்ட போது முகத்தில் ஏற்பட்ட காயத்தின் வடு மட்டும் இன்னமும் ஆறாமல் உள்ளது. இது அவரது பழைய வாழ்வு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.

‘புலிகள் அமைப்பிலிருந்த ஏழு ஆண்டுகால எனது வாழ்வானது மிகவும் மகிழ்ச்சிகரமானது’ என காயத்திரி கூறினார்.

2002ல் காயத்திரி புலிகள் அமைப்பில் இணைந்த போது இவர் தமிழீழ நாட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான யுத்தத்தில் மட்டும் பங்குகொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கவில்லை. அத்துடன் ஆண்களுடன் சமாந்தரமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். தமிழ் சமூகத்தின் பாரம்பரிய நெறிமுறைகளில், பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே பிரதானமாக ஆற்றவேண்டும் என்கின்ற முறைமை காணப்பட்டது.

அத்துடன் தமிழ்ப் பெண்கள், வயதுபோனவர்கள் மற்றும் கணவன்மார்களுக்கு கீழ்ப்படிந்தும் அடிபணிந்தும் நடக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டனர்.

காயத்திரி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததன் மூலம் அவர் தனது சமூகத்தில் பெண் என்ற வகையில் செய்ய முடியாத பல செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பெண் போராளியான காயத்திரி பல பாரிய யுத்தங்களில் பங்கெடுத்தார்.

அத்துடன் சாதாரண போராளியாக இருந்த இவர் பின்னர் தன் சக ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும் ஒரு போராளியாக உயர் நிலையை எட்டியிருந்தார்.

‘புலிகள் அமைப்பில் சமத்துவம் பேணப்பட்டது. அதாவது அனைத்து பெண் போராளிகளும் ஆண் போராளிகள் செய்கின்ற அதே செயற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவையிருந்தது. பெண் பயிற்சியாளர்களை ஆண் போராளிகள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அவர்கள் ‘நீ ஒரு பெண்’ எனக் கூறி எம்மை தம்மிலிருந்து வேறுபடுத்தவில்லை’ என காயத்திரி கூறினார்.

2009ல் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், காயத்திரியின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. இவர் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் ‘புனர்வாழ்வு முகாமில்’ தனது வாழ்வைக் கழித்தார்.

2009ல், சிறிலங்கா முழுவதும் 22 புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன.  நிலையான சமாதானம், புனர்வாழ்வு, சமூக ஒத்துழைப்பு மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்குதல் போன்ற நோக்கத்திற்காகவே புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தால் புனர்வாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மையங்களில் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த ஆண் மற்றும் பெண் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு மையத்தில் இருந்த போது காயத்திரி தையல், கேக் ஐசிங் பயிற்சிகளைப் பெற்றிருந்த போதிலும் போருக்குப் பின்னர் தனது வாழ்வை பொருளாதார ரீதியில் நிலைநிறுத்தக் கூடிய அளவிற்கு இவர் போதியளவு தொழிற்பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை. காயத்திரி புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டது.

இவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவதற்காகச் சென்றிருந்த போதிலும், இதற்காக வழங்கப்பட்ட சம்பளத்தைக் கொண்டு இவரால் தனியொரு பெண்ணாக வாடகைக் குடியிருப்பில் தங்கி வாழ்வதற்கான ஏதுநிலை காணப்படவில்லை. ஏனெனில் இவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனால் இவர் அந்த வேலையை விட்டு விட்டு மீண்டும் பருத்தித்துறையிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பி விட்டார்.

தனது பெற்றோர்களிடம் காயத்திரி திரும்பி வந்த பின்னர், இவருக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. யுத்த காலப்பகுதியில், தமது மகள் ஒரு போராளி என காயத்திரியின் பெற்றோர்கள் பெருமையுற்றிருந்தனர்.

ஆனால் தற்போது காயத்திரி இந்த சமூகத்தின் நெறிமுறைகளுக்கு தவறாக புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதை நினைத்து இவரது பெற்றோர்கள் அவமானமடைகின்றனர். அத்துடன் காயத்திரியின் சகோதரர்கள் காயத்திரியை கட்டுப்படுத்துகிறார்கள்.

‘நீ ஆண்களுடன் கதைக்கக்கூடாது, ஆறு மணிக்குப் பின்னர் வெளியே செல்லக் கூடாது என எனது சகோதரர்கள் கூறுகின்றனர். இவ்வாறான ஒரு கட்டுப்பாட்டிற்குள் வாழ்வதென்பது மிகவும் கடினமானதாகும். எனக்கேற்றவாறு அவர்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் அவர்களுக்கு ஏற்றவாறு மாறவேண்டியுள்ளேன்’ என காயத்திரி கூறினார்.

காயத்திரியின் வாழ்வானது அவரைப் போன்ற முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வு எவ்வாறுள்ளது என்பதைப் பிரதிபலிக்கின்றது. யுத்தத்தின் இறுதியில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 3000 வரையான பெண் போராளிகள் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாக 2011ல் அனைத்துலக நெருக்கடிகள் அமைப்பால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா இராணுவத்தால் நிர்வகிக்கப்பட்ட புனர்வாழ்வு மையங்கள் முன்னாள் போராளிகள் சமூகத்துடன் மீண்டும் ஒன்றித்து வாழ்வதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு தவறிவிட்டதாக முன்னாள் போராளிகள் மற்றும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘முன்னாள் போராளிகள் பல பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர் என்பது தெளிவாகும். இவர்கள் இராணுவத்திடம் சரணடையும் போது அல்லது இராணுவத்தால் கைது செய்யும் போது தமது வாழ்வை முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையிலிருந்தனர்’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவிற்கான மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்தார்.

முன்னாள் போராளியான கிளிநொச்சியைச் சேர்ந்த 46 வயதான அன்னலக்ஸ்மி 2002ல் ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் காயமடைந்திருந்தார். இவரது கணவரும் போராளியாகச் செயற்பட்டதுடன் 2009ல் இராணுவத்திடம் சரணடைந்து அவர்களது தடுப்பில் வைக்கப்பட்டிருந்த போது இறந்தார்.

போரின் பின்னர், அன்னலக்ஸ்மி கோழி வளர்ப்பிற்காக தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் கடன் பெற்று தனது தொழிலை ஆரம்பித்தார். ஆனால் மிருக வளர்ப்புத் தொடர்பாக இவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. இதனால் கோழிக்குஞ்சுகள் இறக்கத் தொடங்கின. இதனால் இவர் தனது வருவாயைப் பெற முடியவில்லை.

‘புனர்வாழ்வு முகாங்களில் வாழ்ந்த போது இவர்களது நாட்கள் வீணாடிக்கப்பட்டன. பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடிய தொழிற்பயிற்சிகளை இவர்கள் பெற்றிருக்கவில்லை’ என அலன் கீனன் தெரிவித்தார்.

‘பொருளாதாரம் சிதைவுற்ற நிலையை இவர்கள் சந்தித்ததுடன் முன்னாள் போராளிகள் என்கின்ற பெயரால் சமூகத்தில் பல்வேறு தடைகளையும் சுமைகளையும் இவர்கள் சுமக்க வேண்டிய நிலை காணப்படுகிறது’ என அலன் கீனன் தெரிவித்தார்.

சிறிலங்காவின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணமானது பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

தனது கிராமத்தில் வாழும் மக்கள் தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும், ஏனெனில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தான் அங்கிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அடிக்கடி தனது பெற்றோர்களின் வீட்டிற்கு வருவதாலேயே மக்கள் தன்னுடன் கதைப்பதற்கு தயக்கம் காண்பிப்பதாகவும் காயத்திரி கூறினார். ‘நான் தொடர்ந்தும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் தொந்தரவு செய்யப்படுகிறேன்’ என காயத்திரி கூறினார்.

காயத்திரி மற்றும் அன்னலக்ஸ்மியின் அனுபவங்கள் சாதாரணமானவையல்ல என அலன் கீனன் தெரிவித்தார்.

‘முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் சிறிலங்கா காவற்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றனர். நான் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு முன்னாள் போராளி ஒருவரை சந்தித்தால் நானும் காவற்துறையினரால் கண்காணிக்கப்படுவேன். இது எனக்கு இடையூறையே ஏற்படுத்தும்’ என கீனன் தெரிவித்தார்.

காயத்திரி என்னுடன் கதைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டார். இவர் புறப்படுவதற்கு முன்னர், தனது கடந்த காலம் மற்றும் தனது முகத்திலுள்ள வடு காரணமாக, தனது பெற்றோரால் தனக்கான கணவனை தேடிக்கொள்ள முடியவில்லை எனக் கூறினார்.

‘ஆனால் ஒரு நாள் எனக்கு பிள்ளைகள் பிறப்பார்கள். நான் அவர்களுக்கு எனது முகத்திலுள்ள வடுவைப் பற்றிக் கூறுவேன். அப்போது அவர்கள் தமது தாய் ஒரு போராளி என்பதை அறிந்து கொள்வார்கள்’ என காயத்திரி தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – Martin Bader
வழிமூலம்    – News deeply
மொழியாக்கம் – நித்தியபாரதி

 

Leave a comment