வடமாகாண ஆளுநர் மாற்றம் தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் மாற்றப்பட்டதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் தமக்கு தெரியாதெனவும் ஆளுநராக ரெஜினோல்ட் குரேயே தற்போதும் பதவி வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்திற்கு முன்னர் 9 மாகாணங்களினதும் ஆளுநர்களுடன் நடத்திய சந்திப்பில் ஆளுநர்களை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், ஆளுநர்களுடைய பதவிக்காலம் 3 வருடங்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளமையாலேயே இவ்வாறு ஆளுநர்களை மாற்றம் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதன்படி மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஷ்வரன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்திகள் வெளியாகின.இந்த விடயம் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் எஸ். இளங்கோவனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும் போது, ஆளுநர்கள் ஜனாதிபதியுடன் சந்தித்தமை தொடர்பாக அறிந்திருக்கிறோம். ஆனால், ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக நாங்கள் அறியவில்லை.அதுதொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் எமக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடமாகாண ஆளுநர் மாற்றப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றமையை நாங்கள் அறிந்துள்ளோம்.
வடமாகாண ஆளுநர் இதுவரையில் மாற்றம் செய்யப்படவில்லை. வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரேயே தொடர்ந்தும் பதவி வகித்து வருகின்றார்.தற்போது கொழும்பில் இருக்கும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே 29 ஆம் திகதி வடமாகாணத்திற்கு வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

