பாகிஸ்தான் திரும்பும் முஷரப்புக்கு பாதுகாப்பு அளிக்க ராணுவ அமைச்சகம் மறுப்பு

5964 0

பாகிஸ்தான் திரும்பும் முஷரப்புக்கு பாதுகாப்பு அளிப்பது எங்கள் வேலை அல்ல என்று ராணுவ அமைச்சகம் கூறி மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 74), கடந்த 2016-ம் ஆண்டு துபாய்க்கு சென்றார். அவர் மீது பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கு, தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து குவித்து உள்ளதாக எழுந்து உள்ள புகார் பற்றி தேசிய பொறுப்புடைமை முகமை விசாரிக்கிறது.

இந்த நிலையில் முஷரப் அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக அவரது நெருங்கிய கூட்டாளியும், பாகிஸ்தான் அவாமி இட்டேஹாத் கட்சியின் பொதுச்செயலாளருமான இக்பால் தர் கடந்த வாரம் கூறினார்.

நாடு திரும்பும் முஷரப்புக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டு அவரது வக்கீல், பாகிஸ்தான் ராணுவ அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக முறைப்படி விண்ணப்பமும் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு பாதுகாப்பு அளிப்பது எங்கள் வேலை அல்ல என்று ராணுவ அமைச்சகம் கூறி, மறுத்து விட்டது.

இது குறித்து முஷரப்புக்கு ராணுவ அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

இதே போன்று உள்துறை அமைச்சகத்துக்கும் முஷரப் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு அளிப்பது பற்றி உள்துறை அமைச்சகம் எந்த உறுதி அளிக்கவும் மறுத்து விட்டது. அத்துடன் முஷரப் பாகிஸ்தான் திரும்பும் திட்டம் பற்றிய முழு விவரங்களையும் தருமாறு கேட்டு உள்ளது. ஆனால் முஷரப் தரப்பில் இதுவரை எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a comment