அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா!

1854 0

இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா கட்டாயப்படுத்தி சிறைச்சாலை பேரூந்திலிருந்து சங்கீதா பொலீஸாரால் கீழே இறக்கப்படும் போது தந்தையிடம் அவள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டது இவ்வாறுதான்.தாய் இன்றி நிர்க்கதியான தனது மகள் தன்னை தன்னோடு இருங்கள் என்று ஏக்கத்தோடு கெஞ்சிய போது ஆனந்தசுதாகரின் உணர்வுகள் எப்படியிருந்திருக்கும்! வார்த்தைகளால் அதனை எழுதமுடியவில்லை. மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கிவிட்டு தலையை குனிந்து கொண்டார் அந்த தந்தை. இந்தக்காட்சிகள் அங்கிருந்த பலரின் கண்களையும் கலங்கவைத்தது.

2008 ஆம் ஆண்டு பிலியந்தலை பேரூந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக இருந்த சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

எனவே சங்கீதா பிறந்தது முதல் தனது தந்தையின் அரவணைப்பை இழந்தாள்.பத்து வயது வரை தாய் யோகராணியுடன் வாழ்ந்த சங்கீதா தனது அப்பாவை பற்றி கேட்கும்போதெல்லாம்அப்பா கொழும்பில் இருகின்றார் வருவார் வருவார் என இதுவரை ஆறுதல் சொல்லி வந்த அம்மாவும் இல்லை,

எனவேதான் கொழும்பிலிருந்து வந்த அப்பா என்றாலும் தங்களோடு இருக்க வேண்டும் என்பதே சங்கீதாவின் விருப்பம். ஆனாலும் பத்து வயதேயான சங்கீதாவுக்கு தனது தந்தையின் நிலைமைகள் புரியவில்லை. ஆயுள் தண்டனையின் விளக்கம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை இதனால்தான் நீங்களாவது எங்களோடு இருங்கள் அப்பா, நாளான்றைக்கு (நாளை மறுதினம்) வருவீங்கள்தானே என்ற கேள்விகள் எழுகின்றன.

2008 ஆம் ஆண்டு ஆனந்தசுதாகர் கைது செய்யப்படும் போது சங்கீதா தாயின் கருவில் எட்டு மாத சிசு, சங்கீதாவின் அண்ணன் கனிதரனுக்கு இரண்டு வயது, இருவரும் விபரம் தெரிந்த நாள் முதல் தந்தையை சிறைக்குள்ளேயே பார்த்திருக்கின்றனர்.

தனது குழந்தைகளை ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டு பாசத்தை பரிமாற இடையில் இருந்த கம்பிகள் ஆனந்தசுதாகருக்கு தடையாகவே இருந்து வந்தன. ஏனைய பிள்ளைகள் போன்று தாங்களும் அப்பாவுடன் செல்லமாக சண்டை பிடிக்க வேண்டும், கடைக்கும் கடற்கரைக்கும் செல்ல வேண்டும், கோயில் திருவிழாவுக்கு போகவேண்டும், அங்கு அப்பாவுடன் சண்டையிட்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கவேண்டும், அப்பா அம்மா என எல்லோருடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட வேண்டும், பண்டிகை காலத்தில் முற்றத்தில் அப்பாவுடன் வெடி கொளுத்தி விளையாட வேண்டும்.அப்பாவின் தோளில் முதுகில் ஏறி சுற்றவேண்டும், அப்பாவின் மடியிலிருந்து சாப்பிட வேண்டும் போன்ற எல்லா ஆசைகளும் இப் பிஞ்சுகளிடமும் இருந்ன ஆனால் அரசியல் கைதி என்ற ஒரு சொல் அதனை அப்படியே குழி தோண்டி புதைத்துவிட்டது.

சங்கீதாவின் அம்மம்மா சொன்னார் பாடசாலைக்கு ஏனைய குழந்தைகள் தங்களது அப்பாக்களுடன் வரும் போது கனிதரனும் சங்கீதாவும் ஒரு வித ஏக்கத்தோடு பார்பார்கள் என்றும் அந்த பார்வை தாங்களும் இவ்வாறு அப்பாவோடு பாடசாலைக்கு வரவேண்டும் என்பதாகவே இருக்கும் என்றும் சொன்னார். இப்படி இந்தக் குழந்தைகளிடம் எண்ணற்ற ஏக்கங்கள்.

கடந்த 15 ஆம் திகதி தாய் இறந்த பின்பு தந்தையை அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுது. அதன் போது அப்பா வருவார் என்ற செய்தி அவர்களிடத்தில் கூறப்பட்ட போது தாயின் பிரிவு துயரிற்குள்ளும் குழுந்தைகளின் முகங்களில் மலர்ச்சி ஏற்பட்டதாக உறவினர்கள் சொன்னார்கள். அப்பா வரும் போது அம்மாவும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் எண்ணியிருக்கலாம்?

முதல் முதலாக தனது குழந்தைகளை ஆரத் தழுவி கட்டியணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் தனது மனைவின் மரணத்தில்தான் இடம்பெறும் என்று ஆனந்தசுதாகர் ஒரு போதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. தாயின் இறுதி நிகழ்வில் குழந்தைகள் இருவரும் தாயின் உடலை பார்த்த தருணங்களை விட தந்தையின் முகத்தை பார்த்த தருணங்களே அதிகம்.

மரணச்சடங்கு நடந்துகொண்டிருக்கும் போது அடிக்கடி தந்தையுடன் சென்று ஒட்டிக்கொள்ளும் காட்சிகள் குழந்தைகளின் தந்தை மீதான ஏக்கத்தை வெளிப்படையாகவே காட்டி நின்றது.

இறுதி ஊர்வலம் கனிதரன் கொள்ளிக்குடத்துடன் சுடுகாடு நோக்கி நடக்கின்றான். அப்போது அவனின் எண்ணங்கள் தான் திரும்பி வரும் போது அப்பா வீட்டில் இருக்க வேண்டும் என்பதே, கடவுளே நான் சுடலைக்கு சென்று திரும்பி வரும்வரை அப்பாவை வீட்டில் வைத்திரு என்று வேண்டிக்கொண்டு சென்றதாக சொன்னான்.

ஆனாலும் அவனது வேண்டுதல்கள் நிறைவேறவில்லை, அவன் வீடு வந்த போது தந்தை மீண்டும் சிறைச்சாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இது அவனது மனதை வெகுவாக பாதித்திருக்கிறது. சுடுகாட்டுக்குச் சென்று ஆவலோடு திரும்பியவன் முதலில் கேட்டது அப்பா எங்கே என்றுதான். இது ஒருபுறமிருக்க

தாயின் உடல் சுடலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்க தந்தையின் சிறைச்சாலை பேரூந்து கொழும்பு மகசீன் நோக்கி செல்ல தயாரான போது அதற்கிடையில் கிடைத்த சிறிது நேரத்தில் ஆனந்தசுதாகர் தனது மகளை அரவணைந்து மடியில் வைத்துக்கொள்கின்றார்.

முதன் முதலாக அப்பாவின் மடியில் அமர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு சங்கீதாவுக்கு அம்மாவின் மரணத்தில் கிடைக்கிறது. தனது மனைவியின் மரணத்தில் தனது மகளை பத்து வயதில் மடியில் இருத்திக்கொள்கின்றார் ஆனந்தசுதாகர். அப்பாவின் மடியில் இருந்துகொண்டே அவரின் முகத்தை ஏக்கத்தோடு பார்க்கின்றாள் சங்கீதா. அவளின் பார்வை அப்பாவின் மடியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே காணப்பட்டது.

அம்மா இல்லா வீட்டில் இருப்பதனை விட அப்பாவுடன் சிறைசாலையில் இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கும் என்று எண்ணியிருப்பாளோ என்னவோ ஆனந்தசுதாகர் சிறைச்சாலை பேரூந்தில் ஏற்றப்பட்ட போது சங்கீதாவும் அவருடன் பின்தொடர்ந்து அந்த பேரூந்தில் ஏறிய காட்சி உணர்வுகளின் உச்சக் கட்டமாக இருந்தது.

இந்தக் காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தையை பிரிய மனமில்லாத அந்தப் பிஞ்சுக்கு தாயில்லாத இந்த வெளி உலகத்தை விட தந்தையிருக்கும் சிறைச்சாலை தனக்கு மகிழ்ச்சியை தரும் என எண்ணியமை கல் மனதையும் கசிய வைத்த சம்பவமாகவே காணப்பட்டது.

எல்லோரும் கண்கலங்கி நிற்க எதையும் அலட்டிக்கொள்ளாதவளாக சிறைச்சாலை பேரூந்துக்குள் ஏறிவிட்டாள் சங்கீதா. சற்றும் இதனை எதிர்பார்த்திராத காவல் கடமையில் இருந்த பொலீஸாருக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தங்களை சுதாகரித்துக்கொண்டு சங்கீதாவை சிறைச்சாலை பேரூந்திலிருந்து கட்டாயமாக இறக்கிவிடுகின்றனர்.

சங்கீதா இறக்கப்படுகின்ற போது தந்தையிடம் அப்பா இனி அம்மாவும் இல்லை, நீங்களாவது எங்களோடு இருங்கள் எனவும் நாளான்டைக்கு வருவீங்கள்தானே எனவும் கேட்கும் அந்த தருணம் வேதனையின் உச்சக் கட்டமாக இருந்தது. ஆனந்தசுதாகர் மகளின் இந்தக் கேள்விக்கு கண்ணீரை மட்டும் பதிலாக வழங்கி விட்டு தலையை குணிந்துகொள்கின்றார். பேரூந்து புறப்பட்டுச் செல்கின்ற போது சங்கீதா விரக்தியாய் வெறுமையாய் தெருவில் நின்றாள்.

தனது கணவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை வழங்க முன் அரசின் உதவி மூலம் கிடைத்த வீட்டுத்திட்டத்தை தானும் ஒரு கூலியாளாக நின்று துவிச் சக்கர வண்டியில் சீமெந்து பைக்கற்றுக்களை சுமந்து சென்று மிகவும் கடினமாக உழைத்து வீட்டை கட்டியிருக்கின்றார் யோகராணி வீடு கட்டும் போதெல்லாம் அவர் அடிக்கடி சொல்வது கணவர் சிறையில் இருந்து வந்தவுடன் அவருக்கு எந்த வேலைகளும் வைக்க கூடாது அவர் வந்து உழைத்து பிள்ளைகளை நன்றாக பார்க்க வேண்டும் என்றே. ஆனால் கடந்த வருடம் கணவருக்கு ஆயுள் தண்டை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் யோகராணி முற்றிலும் உடைந்து விடுகின்றார். அவரிடம் இருந்த தன்னம்பிகையும் தகர்ந்து விடுகிறது இந்த சூழலில் நோய் அவரை பலமாக தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கடந்த 15-03-2018 அன்று இ்நத உலகத்தை விட்டே சென்றுவிடுகின்றார்.

இப்பொழுது அந்த இரண்டு குழந்தைகளும் நிர்க்கதியாய் உள்ளனர். வயோதிக அம்மம்மாவுடன் அவர்களின் வாழ்க்கை பயணம் ஆரம்பிக்கிறது.

சுமார் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைப்பட்டுள்ளனர். ஆனால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பலர் இன்றும் சிறைசாலைகளில் அரசியல் கைதிகளாக வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களோ சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிகளை அனுபவித்து வருகின்றனர். எனவே இந்த அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு இறுதி தீர்மானத்திற்கு அரசு வரவேண்டும் அதற்கான அழுதத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஏற்படுத்த வேண்டும், இல்லை எனில் வருங்காலத்தில் இன்னும் பல சங்கீதாக்களும், பல கனிதரன்களும், பல யோகராணிகளும் உருவாகலாம்.

மு.தமிழ்ச்செல்வன்

Leave a comment