எங்கள் இயக்கத்துக்கு வருவோரை வரவேற்க தயாராக இருக்கிறோம் – தினகரன்

410 0

கே.சி.பழனிச்சாமி குறித்து மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தினகரனிடம் கேட்டபோது எங்கள் இயக்கத்துக்கு வருவோரை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

ஆந்திர மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்காததால் பாராளுமன்றத்தில் பா.ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசமும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ளது.

இந்த தீர்மானத்தை ஆதரிக்க பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒன்று திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க அ.தி.மு.க.வும் முன்வர வேண்டும் என்கிற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன் வைத்துள்ளன.

ஆனால் தீர்மானத்தை ஆதரிக்க அ.தி.மு.க. உடன்படவில்லை. இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து கே.சி. பழனிச்சாமி கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

இதுபற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இதுவரை கே.சி.பழனிச்சாமி என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் என்னை தொடர்பு கொண்டு பேசினால் அவரை இயக்கத்தில் இணைத்துக்கொள்வது பற்றி பரிசீலிக்கப்படும். எங்கள் இயக்கத்துக்கு வருவோரை வரவேற்க எங்கள் கதவு திறந்தே இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment