அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேசம் நிராகரிக்கக்கூடாது -ஜெனிவாவில் அனந்தி

393 0

அச்சுறுத்தலான காலத்தில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களின்  அரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேச நாடுகள்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற     இலங்கை விவகாரம் குறித்த விசேட உபகுழுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உபகுழுக் கூட்டத்தில்  அனந்தி சசிதரன்  மேலும் உரையாற்றுகையில் ,

நான்  வடமாகாண புனர்வாழ்வு அமைச்சராக உள்ளேன். புனர்வாழ்வு அமைச்சராக இருந்தாலும் ஆனால் எங்களுடைய இடங்களில்  முற்று முழுதாக  மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

மக்களுக்கு அந்த இடத்தில் மீற்குடியேற்றுவதற்கான வசதி வாய்ப்புகள் இன்னும்  முழுமையாக  ஏற்படுத்தப்படவில்லை. வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மர நிழலின் கீழ் நின்று கொண்டு வீடுகளைக் கட்டுகின்றார்கள்.

குடியேற்றப்பட்ட பொழுது வீடுகள் எல்லாம் அழிக்கப்பட்டு இன்று கிணறு மலசலகூடம் முற்றுமுழுதாக இல்லாமல் வீடு கட்டுவதற்கு  மட்டும் வெறுமனே  8 இலட்சம் ரூபா   அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.

அதிகமான  காணிகள்  இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்றமையால் அரசாங்கம் ஏற்கனவே கூறியது போன்று  நாங்கள் எதிர்பார்த்தது போன்று நிலங்கள் விடுவிக்கப்படாத ஒரு சூழல் இருக்கின்றது.  உள்நாட்டு அகதிகள் ஒருபுறம் இருக்க புலம்பெயர்ந்து வருகின்ற தமிழர்கள் அரசியல் தஞ்ச   கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பபட்டு பலர் கைது செய்யப்பட்டிருகின்ற சம்பவங்களையும் நாம் பார்க்கின்றோம்.

இந்த இடங்களில் உயிர் பாதுகாப்புக்காகவும்  அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த நாடுகளில் குடியேற வருகின்ற தமிழர்கள் மீது அந்தந்த நாடுகள் கரிசனை கொள்ள வேண்டும்.  இன்னும் நாங்கள் சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்கவில்லை என்பது  அந்த மண்ணில் இருக்கின்ற எங்களுக்கு தான் தெரியும்.  அச்சுறுத்தலான காலத்தில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களுக்கான அரசியல் தஞ்சக் கோரிக்கை இந்த நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மீள் குடியேற்றம் புனர்வாழ்வு என்ற பக்கம்  இன்று வரை வடக்கு மாகாணத்தை புறந்தள்ளி அரசாங்கம் நேரடியாக செய்கின்றது. பல சிக்கல்களை எங்களுடைய மக்கள் எதிர்கொண்டு தான் இருக்கிறார்கள். சொந்த நாட்டிலே அகதிகளாக வாழ்கின்ற சூழல்  இன்றும் நிலவி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment