வன்னிப் போர்க் கொடுமைகள் குறித்து ஜெனீவாவில் கிளிநொச்சி அரச மருந்தாளராகக் கடமையாற்றிய திருமதி கமலாம்பிகை சாட்சியம்!

12100 0

இறுதிப் போரின் போதும் அதற்கு முன்பும் வன்னி மக்கள் அனுபவித்த கொடுமைகளை ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார் கிளிநொச்சி அரச மருந்தாளராகக் கடமையாற்றிய திருமதி கமலாம்பிகை கந்தசாமி.

ஜெனீவா மனித உரிமைகள் சபையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பக்க நிகழ்வில் பங்கேற்று அவர் இந்த விடயங்களை எடுத்துக் கூறினார்.

இலங்கை தொடர்பாக முன்னாள் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் உறுப்பினராக இருந்த ஜஸ்மின் சூகா தலைமையில் இடம்பெற்ற இந்த உபகுழுக் கூட்டத்தில் சர்வதேசப் பிரதிநிதிகள் பலர் பங்கேற்று அவரின் உரையைக்கூர்ந்து அவதானித்தனர்.

கமலாம்பிகை கந்தசாமி மேலும் தெரிவித்தவை வருமாறு:

போரின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலை இடம்பெற்றதை நான் கண்டிருக்கின்றேன். நான் மல்லாவி வைத்தியசாலையில் 1996ஆம் ஆண்டு முதல் அரச மருந்தாளராகப் பணியாற்றினேன். நான் அங்கு சேவையில் இருக்கும்போது, அதிகளவான பொதுமக்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெறவந்தனர்.

பாலியல் கொடுமைகளுக்குள்ளாகிய இளம் பெண்களும் அங்கு சிகிச்சைக்காக வருகை தந்தனர் (அப்போது மல்லாவி இராணுவக் கட்டுப்பாடிலிருந்தது). எனக்குத் தெரிந்து பல பாலியல் கொடுமைகள் அங்கு இடம்பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்குண்டிருந்த மக்களுக்கு மருந்துகளை அனுப்புவதற்கு அரசு கடமைப்பட்டிருந்தது. ஆனால் எமக்குத் தேவையான முழுமை மருந்துகளை அரசு அனுப்பவில்லை. குறைந்தளவான மருந்துகளே எமக்குக் கிடைத்தன. பல குறைபாடுகள் காணப்பட்டன.

வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மின்பிறப்பாக்கியைச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே வழங்கும். மருந்துக்குறைப்பாடு ஏற்பட்ட போதும் செஞ்சிலுவைச் சங்கம் உதவியது. மல்லாவி வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் எறிகணைத் தாக்குதல்கள் இடம் பெற்றன. பல மருத்துவ அதிகாரிகள் கடமையை புறக்கணித்து வெளியேறினர். ஆனால் அவர்களை நாம் குறைகூற முடியாது.

தமது உயிரை அவர்கள் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அதன்பின்னர் 2004ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டுவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் பணியாற்றினேன். இ ந் த க் கால ப் ப கு தி யி ல் முல்லைத்தீவு, கிளிநொச்சி, ள்ளிவாய்க்கால் பகுதிகளில் போர் தீவிரமடைந்தது. போரில் சிக்குண்ட ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் நான் அரச மருந்தாளராக பணியாற்றியபோது எறிகணைத்தாக்குதல்கள் இடம்பெற்றன. வைத்தியசாலை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன. மக்கள் கால்கள், கைகள், கண்களையிழந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்றார்.

காரைநகரைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை கந்தசாமி, தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாμந்து வருகிறார். இவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த மாவீரர் விக்டரின் தாயாராவார்.

Leave a comment