வடமாகாண கல்வியமைச்சர் தமது கட்சியின் வவுனியா அரசியலை பாதுகாப்பதற்காகவே ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் !

4613 0

வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபருக்கு எதிரான நிதி மோசடிகள் முறைகேடுகள் – மிகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலும் – முறைகேடுகளுக்கு துணைபோகும் வகையில் – மீண்டும் அவரை ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அதிபராக வடமாகாணக் கல்வியமைச்சு நியமித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வியமைச்சர் தமது கட்சியின் வவுனியா அரசியலை பாதுகாப்பதற்காகவே ஊழல்வாதிக்கு அதிபர் நியமனம் வழங்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய திரு.கந்தையா தனபாலசிங்கத்தின் நிதி மோசடிகள் முறைகேடுகள் – மிகத் தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலும் – முறைகேடுகளுக்கு துணைபோகும் வகையில் – மீண்டும் ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அதிபராக வடமாகாணக் கல்வியமைச்சு நியமித்துள்ளது.

வடமாகாணக் கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் அவர்கள் தமது கட்சியின் வவுனியா அரசியலை பாதுகாப்பதற்காகவே – மிகப்பெரிய ஊழல்வாதிக்கு அதிபர் நியமனத்தை வழங்கியுள்ளார். இச்செயற்பாடு வடமாகாண கல்வியில் நச்சை விதைக்கும் செயற்பாடு என்பதுடன் – மிகத் தவறான முன்னுதாரணமுமாகும்.

வடமாகாணக் கல்வியமைச்சரின் இச்செயற்பாட்டை மிகவன்மையாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டிக்கின்றது.

ஆதாரங்களுடன் மோசடிகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் – 55 வயதுடன் கட்டாய ஓய்வில் செல்லுமாறு விசாரணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நீண்டகாலம் நியமனத்தினை வழங்காது இருந்தது. ஆயினும் – முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவருக்கு போலியான அனுதாப காரணங்களினைக் காட்டி –; அரசியல் தலையீட்டின் அடிப்படையிலேயே வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவும் பின்னர் செயற்பட்டுள்ளது.

இவ்விடயம் தவறான முன்னுதாரணம் என்பது தொடர்பாக – கௌரவ வடமாகாண முதலமைச்சர் மற்றும் கௌரவ கல்வியமைச்சருக்கும் – நாம் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தோம். ஆயினும் – வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முடிவை கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் வடமாகாண ஆளுநருக்கே உரியது என தெரிவித்ததற்கமைவாக – 08.09.2017 அன்று கௌரவ வடமாகாண ஆளுநர் கௌரவ றெஜினோல்ட் கூரேயுடன் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தோம். இச்சந்திப்பின்போது – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஏனைய வலயக் கல்விப் பணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது – திரு. தனபாலசிங்கம் தொடர்பாக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு எடுத்த முடிவு – தவறானது எனவும், விசாரணைக் குழுவினால் மிகத் துல்லியமாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருந்த நிதிமோசடிகளை – போதிய ஆதாரங்கள் அற்றதென்றும் விசாரணைக் குழுவைக் கேள்விக்குட்படுத்தி – ஊழல் வாதியை வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு காப்பாற்ற முயன்றுள்ளதெனவும் நிதிநிலை ஆவணங்கள் மூலமாகவும் ஆதாரங்களுடன் – கௌரவ ஆளுநரிடம் தெரிவித்திருந்தோம்.

இதன்போது – கௌரவ ஆளுநர் – திரு. தனபாலசிங்கம் தொடர்பான – ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக – மீள பொருத்தமான விசாரணைக்குழு அமைப்பதெனவும் – அவ் விசாரணையின் முடிவின் அடிப்படையிலே நடவடிக்கை மேற்கொள்ளவதெனவும் – அதுவரை நியமனம் எதுவும் வழங்குவதில்லை எனவும் உறுதியளித்திருந்தார். இவ்விடயம் தொடர்பான முழுமையான கூட்ட அறிக்கை, சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஆளுநர் செயலகத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் – கௌரவ ஆளுநரால் அளிக்கப்பட்டிருந்த உறுதிமொழிகளையும் மீறி – கௌரவ வடமாகாண கல்வியமைச்சர் இந்நியமனத்தை வழங்க ஆர்வம் காட்டியுள்ளமையை அவரது அரசியல் இருப்புக்கானதாகவே இலங்கை ஆசிரியர் சங்கம் கருதுகின்றது. இதன்மூலம் – ஊழல்வாதிகளை ஊக்குவிப்பதோடு – வடமாகாண கல்விப் புலத்தில் மிகத் தவறான முன்னுதாரணமொன்றையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
நிர்வாக முறைகேடுகளிலும் அரசபண மோசடியிலும் ஈடுபட்டிருந்த ஒருவரை தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிப்பது அறநெறிகளைப் போதிக்கும் கல்விப் புலத்திற்குப் பொருத்தமற்றது என்பதுடன் – இவ்விடயம் தொடர்பாக – கௌரவ வடமாகாண ஆளுநரும் கௌரவ வடமாகாண முதலமைச்சரும் அதீத கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றது.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்
இலங்கை ஆசிரியர் சங்கம்

Leave a comment