கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய அதிகாரி பதவியிறக்கம்!

626 0

Navyசிறீலங்கா கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய கடற்படையின் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் வெலகெதர பதவியிறக்கம் செய்யப்பட்டார்.சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தினால், குற்றவாளியாக காணப்பட்டதையடுத்தே, கொமாண்டர் கே.சி.வெலகெதர பதவியிறக்கப்பட்டுள்ளார்.

இதனை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர உறுதிப்படுத்தியுள்ளார்.  கடற்படைக்குத் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றார் மற்றும் கடற்படையை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 13ஆம் திகதி வரை, அனுமதியின்றி விடுமுறையில் இருந்தார் என்பதாலும் இந்தக் காலப்பகுதியில் கடற்படைத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தாமல் வெளிநாடு சென்றார் என்பதாலும், இராணுவ நீதிமன்றம், கொமாண்டர் கே.சி.வெலகெதவின் மூப்புவரிசையை நான்கு ஆண்டுகளால் குறைத்து, கப்டனாகப் பதவியிறக்கம் செய்துள்ளது.

கொமாண்டர் வெலகெதர சிறீலங்காக் கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்ததுடன், கடற்படையின் திருகோணமலையில் அமைந்துள்ள சித்திரவதை முகாமுக்கும் பொறுப்பாக இருந்தவராவார். அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் குழுவுடன் இணைந்து செயற்பட்டவருமாவார்.

Leave a comment