காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கவில்லை- வைகோ குற்றச்சாட்டு

266 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

முல்லை பெரியாறு விவகாரத்தில் ஜெயலலிதா சரியான முறையில் செயல்பட்டு உச்சநீதிமன்றத்தை அணுகி அடிக்கடி வக்கீல்களுக்கு ஆலோசனை வழங்கி செயல்பட்டார். நாமும் மக்களை திரட்டி போராடினோம். இதனால் ஜெயித்தோம்.

ஆனால் காவிரி தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு சரியான முறையில் வாதங்களை எடுத்து வைக்கவில்லை. அடிக்கடி வக்கீல்களை மாற்றியது. இதனால் நாம் பலவீனப்பட்டோம். ஆனால் கர்நாடக அரசு சிறப்பாக செயல்பட்டது.

பிரபல வக்கீல் பாலிநாரிமன் தந்திரமாக செயல்பட்டு கர்நாடக அரசுக்கு யோசனைகளை கூறி அவர்களுக்கு சாதகமான வாதங்களை கோர்ட்டில் எடுத்து வைத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதா? இல்லையா? என்ற கேள்விக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தமிழகத்திற்கு விரோதமான சட்டவிதிகளுக்கு மாறான அநியாயமான தீர்ப்பை வழங்கியது. இதன் மூலம் தமிழக மக்களின் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளது.

பிரதமர் மோடியின் எண்ணம், விருப்பங்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது. இதற்காக என்மீது அவதூறு வழக்கு போட்டாலும் அதை சந்திக்க தயாராக உள்ளேன்.

கர்நாடக தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு மோடி எதையும் செய்யவில்லை. தமிழகத்தின் இயற்கை வாழ்வாதாரங்களை அழித்து விட்டால் தமிழர் உணர்வு, தமிழ்நாடு ஆகியவற்றை அழித்துவிட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்குள்ள நிலங்களை வாங்கி இன்னும் 10 ஆண்டுகளில் சீரழித்துவிடுவார்கள். தமிழகம் பஞ்சபிரதேசமாகி விடும். நமது முதுகெலும்பை ஒடிக்கும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தலைமை செயலாளர், அன்டை மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றது கண்டிக்கத்தக்கது.

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும் மக்களை வஞ்சிக்க தொடங்கி விட்டது. எனவே தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் 2 லட்சத்து 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் விளைநிலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு இதனை மாநில அரசும் அங்கீகரித்துவிட்டது. இது மிகப்பெரிய அநியாயம். இதனை கண்டித்து ம.தி.மு.க. போராட்டம் நடத்தும்.

பெரியார் குறித்து எச்.ராஜா மீண்டும் மீண்டும் பேசுவது பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோரின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் மோசமாக நடத்தி கொலை செய்தது குறித்து தான் வருந்துவதாக ராகுல்காந்தி பேசியதாக செய்திகள் வருகின்றன. அவர் உண்மையிலேயே அப்படி பேசியிருந்தாரானால் அது எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment