வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மருமகன் அந்தஸ்து குறைப்பு

220 0

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னரின் அந்தஸ்து திடீரென குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கான குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் (வயது 37). இவர், டிரம்பின் மகள் இவான்கா டிரம்பின் கணவர் ஆவார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் பிரசாரத்தில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.

டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆன பிறகு அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. டிரம்பின் மூத்த ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். “ஜேரட் குஷ்னர் மிகப்பெரிய சொத்து, நிர்வாகத்தில் தலைமைப்பண்பு மிக்க முக்கிய பொறுப்பை அவருக்கு அளிப்பதில் பெருமை அடைகிறேன்” என அப்போது டிரம்ப் கூறினார்.

ஜேரட் குஷ்னர், மத்திய கிழக்கு நாடுகளின் சமாதான நடைமுறைகளை கவனித்து வருகிறார்.

இப்போது திடீரென அவரது அந்தஸ்து குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கான குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுவரை உயர்மட்ட அளவிலான ரகசிய அறிக்கைகள் அவரது பார்வைக்கு அளிக்கப்பட்டு வந்தன. இப்போது அது நிறுத்தப்பட்டு உள்ளது. அவரது பின்னணி பற்றிய பரிசோதனைகள் இன்னும் முடிவு பெறாததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ஜேரட் குஷ்னரின் அந்தஸ்து குறைக்கப்பட்டாலும்கூட, டிரம்ப் நினைத்தால் அமெரிக்க ஜனாதிபதிக்கு உரித்தான சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு அவர் தகுதியானது என கருதுகிற எந்த ஒரு ரகசியத்தையும் அவருடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

அந்தஸ்து குறைப்பு நடவடிக்கை குறித்து ஜேரட் குஷ்னரின் வக்கீல் அப்பே லோவெல் கருத்து தெரிவிக்கையில், “ஜேரட் குஷ்னரின் அந்தஸ்தை குறைத்து இருப்பது, ஜனாதிபதி அவருக்கு ஒதுக்கித்தருகிற எந்த ஒரு பணியையும் செய்கிற திறனை பாதிக்காது” என கூறினார்.

Leave a comment