காவிரி விவகாரத்தில் அரசின் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் – ஸ்டாலின் பேச்சு

419 0

காவிரி விவகாரத்தில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தி.மு.க. துணை நிற்கும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். 

காவிரி மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

காவிரி நீரை பெறுவதற்காக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. துணை நிற்கும் என்றார்.

‘மேலும், உச்ச நீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீர்ப்பாசனத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும்’ என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழகத்தின் உரிமைகளுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. துணை நிற்கும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Leave a comment