பொலிவியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பலி

206 0

பொலிவியாவில் நடைபெறவுள்ள இசைவிழாக்கான முன்னேற்பாட்டின்போது, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஒருரோ சுரங்கத் தொழில் நிறைந்த நகராகும். இங்கு பல்வேறு வண்ண உடைகள், விதவிதமான முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நகரில் ஒவ்வொரு ஆண்டும் வாத்திய இசை நிகழ்ச்சி பிரமாண்டமான அளவில் நடைபெறுவது பெரும் சிறப்பாகும்.

கடந்த 2002-ம் ஆண்டு முதல் இந்த இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் திரளாக பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இசை கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான இசை திருவிழா அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு சிறப்பாக செய்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சாலையோர கடை ஒன்றில் சமையல் செய்து கொண்டிருந்த சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சிலிண்டர் வெடித்து சிதறியதில் அப்பகுதியில் இருந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். மேலும், 40-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Leave a comment