மாற்று சமுகத்துக்கு காணிகளை விற்றவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்-வியாளேந்திரன்

22088 0
தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் ஆயிரக்கணக்கான காணிகளை வழங்கியவர்கள் தற்போது தேர்தலில் வாக்கு கேட்டு வந்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார்.

வாகரை, மாங்கோணி பாம்கொலணியில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. பல உயிர்களை, பல தியாகங்களை செய்திருக்கின்றோம். இன்று அதை எல்லோரும் மறந்து விட்டு, பல கட்சிகள் வந்து அபிவிருத்தி செய்தோம், செய்யப் போகின்றோம் என்று கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், மாற்றுச் சமூகத்துக்கும் பல்லாயிரக் கணக்கான காணிகளை வழங்கியவர்கள், தளவாய் பகுதியில் பல ஏக்கர் காணிகள் விற்றவர்கள், தற்போது தமிழ் மக்களை பாதுகாக்க போகின்றோம் என்று வந்துள்ளனர்.

கடந்த அரசாங்க காலத்தில் பேசிவிட்டு வெளியே சென்றால் வெள்ளை வேனில் கடத்தி விடுவார்கள். கடத்தியவர்கள் இவர்கள் என்பதை யாரும் மறந்து விட முடியாது. தற்போது அந்த நிலைமை சீராக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் எம்மவர்களை, புத்திஜீவிகளை கடத்தினார்கள், புத்திஜீவிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என வட கிழக்கில் சுட்டுக் கொன்றார்கள். இந்த மட்டக்களப்பு மண் பல புத்திஜீவிகளை இழந்து நிற்கின்றது.

கிழக்கு பல்கலைக் கழக பேராசிரியர் ரவீந்திரநாத் 2006ம் ஆண்டு கடத்தப்பட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும், சுட்டும் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒரு சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். நிலத்தை பாதுகாக்க பல போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். இராணுவ முகாம் மற்றும் பொலிஸ் முகாம்கள் இருந்த எமது மக்களின் காணிகளை மீட்டுக் கொடுத்தவர்கள் நாங்கள்.

ஆனால் தற்போது தேர்தல் கேட்டு வரும் எந்தக் கட்சிகளும் இதனை செய்யவில்லை. ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தில் பிரதிநிதிகள். எங்களது இருப்பை தக்க வைத்துக் கொண்டால் மாத்திரம் அபிவிருத்திகளை செய்ய முடியும். இல்லையேல் எமது மொழி, சமயம், கலாச்சாரம் எல்லாமே கேள்விக்குறியாக மாறிவிடும்.

தென்னிலங்கையில் இருப்பவர்களும், எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மற்றைய சமூகத்தினரும் எங்களை, எம்மவர்களை சூழ்ச்சிகரமான வலைக்குள் இழுத்து எம்மவர்களின் கண்களை குத்துகின்ற கபட நாடகத்தை பாராளுமன்ற தேர்தலில், மாகாண சபை தேர்தலில் ஆடினார்கள், இப்போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆடுகின்றார்கள் என்றார்.

Leave a comment